ஏப்ரல் 14க்கு பிறகு எல்லாம் இப்படித்தான் நடக்கும்..! எப்படின்னு தெரியுமா?

Apr 14க்கு பிறகு எப்படி இருக்க வேண்டும்? Dr. V. Hariharan, MBBS, MD.,


Disclaimer: கீழே உள்ளது எனது யூகம் மட்டுமே. உண்மைத்தன்மைக்கு நான் கியாரென்டி கிடையாது.  

இந்தியாவின் 21 நாள் ஊரடங்கு மிக மிக ஆரம்பக்கட்டதிலேயே வந்து விட்டதால், மக்களின் ஒத்துழைப்பும் உள்ளதால், நமக்கு கரோனா பாதிப்பு, உலகிலேயே குறைவாகத் தான் இருக்கும். மத்திய அரசு, மாநில அரசு மற்றும் போலீஸ்க்கு ஒரு மிகப் பெரும் வணக்கம் சொல்லியே ஆக வேண்டும். 

Apr 15, 2020 அன்று லாக்டவுன் கண்டிப்பாக தளர்ந்து விடும். அதற்கு மேலும் ஊரடங்கு தொடர்ந்தால், இந்திய பொருளாதாரம் படுத்து விடும். அப்புறம் நாம் அம்பேல் தான். 21 நாள் வீட்டில் வைத்து பூட்டிக் கொண்டோம், கரோனா ஓடி விடுமா? இனிமேல் பயமில்லாமல் இருக்கலாமா?

எந்த ஒரு Epidemic/Pandemic (தேசிய/உலகளாவிய கிருமி பரவல்)க்கும் முதலில் மெதுவாக ஏறும். பின்னர் சட்டென கூடும், பின்னர் Plateau எனப்படும் மெதுவாக குறையும் நிலை வரும். இது நீண்ட காலம் இருக்கும், பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும். பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும். அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து விடும். 

இப்போது நாம் Plateauவில் இருக்கிறோம். நல்ல விஷயம். ஆனால் லாக்டவுன் முடிந்த பிறகு ஒரு சிறிய Spike (கேஸ் எண்ணிக்கை அதிகமாதல்) இருக்கும். அரசு மறுபடி லாக்டவுனை செய்ய இயலாது. பொருளாதாரம் இல்லையென்றால் கும்பலோடு கோவிந்தா தான், கரோனாவால் கொஞ்சம் பேர் செத்தால் சாகட்டும் என அமெரிக்கா போல விட்டு விடும்.

ஏனெனில் நாம் கரோனாவிற்கு எதிரான Battle readinessக்கு நாம் ஏறத்தாழ வந்து விட்டோம். அதனால் வரும் மாதங்களில் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ரோட்டில் போலீஸ் உங்களை தடுக்காது, மீடியாவும் கரோனாவை ஒதுக்கி விடும். நீங்கள் தான் உங்களை/குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 

Apr15-july 15 2020 ஞாபகம் இருக்கட்டும், Corona Carrierகளுக்கு சளி/இருமல் இல்லாமலே தொண்டையில் வைரஸ் இருக்கலாம். அவர்களிடம் இருந்து உங்களுக்கு வரலாம். 

லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும். ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள், டேபிளில் கைகளுக்கான சானிடைசர் எப்போதும் இருக்கட்டும். முகத்தில் கை வைக்காதீர். அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை அப்புறப்படுத்த வேண்டாம்.

தனியாக சாப்பிடவும். முடிந்த வரை கேன்டீன் வேண்டாம். சமையல்காரனுக்கு கரோனா இருக்கலாம், உணவில் தும்மி வைத்து, உங்களுக்கு வரலாம். அல்லது கேன்டீனில் உணவருந்தும் மற்றவரிடமிருந்து வரலாம். முடிந்தவரை 3-6அடி social distancingஐ செய்யவும். கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள். லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்.  

கார் பிரச்சினை இல்லை. ஏசி போட்டு செல்லவும். பைக்கில் எப்போதும் மாஸ்க் வேண்டும். சிக்னலில் ஓரமாக நில்லுங்கள். யாராவது தும்மி வைத்தால் உங்கள் மேலும்/உங்கள் பைக் மேலும் வைரஸ் உட்காரலாம். 

ரெகுலர் ஆட்டோ/டாக்சி- மாஸ்க் அணியவும். வெளியே வந்த பின் கைகளை சுத்தப்படுத்தவும். டிரைவர் ரொம்ப இருமினால், இறங்கி வேறு டாக்சி பிடிக்கவும். பஸ்-N95மாஸ்க் அவசியம். நாலைந்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பக்கத்து சீட் நபர் இருமினால், ஓடி விடுங்கள். அடுத்தவருக்கு டிக்கெட் வாங்க வேண்டாம். டிக்கெட் எடுத்த பின் உடலை தொடாதீர்கள். இறங்கிய பின் கைகளை சுத்தப் படுத்தவும். டிரெயின்-இதையே செய்யவும். 

ஆபீசுக்கு அரை மணி நேரம் முன்னதாக செல்லவும். கூட்டம் இல்லாமல் செல்லலாம். ஷேர் ஆட்டோ வேண்டவே வேண்டாம். காலேஜில் மாஸ்க் அணியுங்கள். பையில் சானிடைசர் இருக்கட்டும். வாத்தியார்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், ஏனென்றால் பலர் எச்சில் தெறிக்க கிளாஸ் எடுப்போம். 

தியேட்டர்- முடிந்தவரை வேண்டாம். உயிர் போகும் அவசியம் என்றால் மட்டுமே செல்லவும். போனாலும் N95 மாஸ்க் அவசியம். Hand sanitizer அவசியம். பாப்கார்ன் வேண்டாம். மால்- வேண்டாம். ஆனால் நல்ல மாஸ்க் அணிந்து செல்லாம். 

ஹோட்டல்- முடிந்தவரை வேண்டாம். வேறு வழியில்லை என்றால் swiggy. அல்லது பார்சல். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் என்றால், ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும். அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும். 

மளிகை/பால்-ஹோம் டெலிவரி தேவலாம். பில் போட லேட்டானாலும், social distancingஐ பின்பற்றுவது நல்லது. கூட்டமில்லாத கடைக்கு செல்லுங்கள். பேக்கரி/டீக்கடை-இங்கே தான் அதிகமான பரவல் வரும். ஏனெனில், மாஸ்க் அணிந்து யாரும் சாப்பிட முடியாது. தொற்று வர வாய்ப்பு அதிகம். முடிந்தவரை வேண்டாம். 

ரோடு சைடு டீக்கடை/பேக்கரி- வெளியூர் ஆட்கள் அதிகம் வருவார்கள். அதனால் முடிந்தவரை வேண்டாம். ஏர்போர்ட்/ ஏரோப்பிளேன்- இத்தனை நாள் நாம் அமெரிக்க/ஐரோப்பாவை வியந்து பார்த்தோம். இன்றைக்கு நாம் தான் கிரேட். அவர்களை பார்த்தாலே பயம் வருகிறது. ஏர்போர்ட் மற்றும் விமானங்களில் தான் அதிகளவில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருப்போம்.

எந்த surfaceஐயும் தொடாமல் இருப்பது நல்லது. தொலைதூர ரயில் மற்றும் பஸ் பயணம்-மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவும். முடிந்தவரை வேண்டாம். மாஸ்க் மற்றும் hand sanitizer பயன்படுத்தவும். எந்த surfaceஐயும் தொடாமல் இருப்பது நல்லது. கோயில்-ஜாக்கிரதையாக செல்லவும் 

கிளினிக்/மருத்துவமனைகள்-N95மாஸ்க் இல்லமால் செல்ல வேண்டாம். கை துடைப்பானை கையில் எடுத்து செல்லவும். வெளியே வந்த பின் கைகளை சுத்தப்படுத்தவும். முடிந்தவரை social distancing அவசியம். Elective surgery என்றால் மூன்று மாதம் தள்ளிப் போடவும். செய்தே ஆகிய வேண்டும் என்றால் செய்யுங்கள்.

எவ்வளவு சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆகி விடுங்கள். முடிந்தவரை தனியறை எடுக்கவும். டிஸ்சார்ஜ் ஆன பிறகு சொந்தங்கள் வீட்டிற்கு வந்து பார்க்கட்டும். அவர்களுக்கு கரோனா வந்தால், வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். 

திருமணம், பர்த்டே பார்ட்டி, etc., தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம். அங்கே சென்றால், "அந்த ஆண்ட்டி நகையை பாத்தியா" என மொக்கை போடாமல், சட்டென வந்து விடுங்கள். கைகொடுக்கும் பழக்கமும் இனி வேண்டாம். 

"சும்மா ஏதாவது சொல்லாதீங்க டாக்டர்" என நீங்கள் இதைப் புறக்கணிக்கலாம். ஞாபகம் இருக்கட்டும். நூறு வருடங்களில் முதன் முறையாக ஒரு வைரஸ் நம்மை 21நாள் முடக்கியுள்ளது. அலட்சியமாக இருந்து நம் குடும்பத்தை அனாதை ஆக்க வேண்டாம். 

July 15, 2020 to March 31, 2021 எப்படி இருக்க வேண்டும்? அதை இன்னொரு நாள் சொல்கிறேன்.