பன்னீரும் ஜெயலலிதாவை பார்க்கலையா? அப்பல்லோவில் என்னதான் செய்தாராம்?

‘ஆறுமுகச்சாமி விசாரணைக் கமிஷன் என்னை அழைத்தால் நான் சென்று, ஜெயலலிதா மரணம் குறித்து எனக்குத் தெரிந்த தகவல்களை சொல்வேன்’ என்று முதன்முறையாக வாய் திறந்து பேசியிருக்கிறார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.


அதாவது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஒரு தடவைகூட பார்க்க அனுமதி கிடைக்கவில்லையாம். அதனால் எனக்கு எதுவுமே தெரியாது. அதனால்தான் அம்மா மரணத்தில் உள்ள நியாயம் வெளியே வரவேண்டும் என்பதற்காக தர்மயுத்தம் நடத்தினேன் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது சொன்னதை ஏன் இதுவரை பன்னீர் சொல்லவில்லை என்பதே பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. பன்னீருக்குத் தெரியாமல் எதுவுமே நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அப்போது சசிகலாவின் ஆகச்சிறந்த அடிமையாக இருந்தவர்தான் பன்னீர்.

இத்தனை நாட்கள் கழித்து இப்படி சொல்கிறார் என்றால், அதில் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பல்வேறு கருத்துகள் வலைதளங்களில் உலா வருகின்றன. இவை எல்லாமே உண்மை என்று ஏற்கவும் முடியவில்லை, ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை.

மோடியுடன் திடீர் நட்பு கொண்ட காரணத்தால் ஜெயலலிதா சாகிறவரை இறுதி தீர்ப்பு வரவில்லை. மோடியை எதிர்த்த காரணத்தால்தான், லல்லு பிரசாத். சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அதேபோல் அ.தி.மு.க.வின் முதல்வராக சசிகலா அமர இருக்கிறார் என்றதும், உடனடியாக சொத்துக் குவிப்பு தீர்ப்பு வந்து, அவர் சிறைக்கு செல்ல நேர்ந்தது. ஆனால், இன்று வரை பன்னீரின் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் விசாரணையே முடியவில்லை.

இத்தனை குளறுபடிகளும் தானே நடக்கிறதா, அல்லது நடத்தப்படுகிறதா என்பதுதான் கேள்வி.