எத்தியோப்பியாவில் ஆயுத புரட்சி? ராணுவத் தளபதியை பாதுகாவலரே சுட்டுக் கொன்ற கொடூரம்!

அடிடிஸ் அபபா: எத்தியோப்பிய ராணுவ தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆப்ரிக்காவின் முக்கிய நாடான எத்தியோப்பியாவில், அபி அகமது என்பவர் பிரதமராக உள்ளார். இவர் புதுப்பொருளாதார சீர்திருத்தங்களை அந்நாட்டில் அமல்படுத்தி வருகிறார். இதன்காரணமாக, நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

அத்துடன், எத்தியோப்பியாவில் உள்ள 9 தன்னாட்சி பிராந்தியங்களிலும் பதற்றம் காணப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள அம்ஹாரா பகுதியின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அசாமினுவ் சுயிஜ் தலைமையில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், இதில்,  பிராந்திய தலைவர் அம்பாச்சேவ் மெக்கோனன் மற்றும் ஒரு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் நடந்த சில மணிநேரத்திலேயே, எத்தியோப்பிய தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை தளபதி சியாரே மெக்கோனன் தனது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகர் அடிடிஸ் அபபாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரை சுட்டுக் கொன்றவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி என்று கூறப்படுகிறது.

எனினும், இவ்விரு கொலைகளும் முக்கியமானவை என்பதால், இதில் ஏதேனும் முக்கிய காரணம் இருக்கலாம் என்றும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.