ஓரமாக நிற்க வைக்கப்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ்! டெல்லி அசோகா ஓட்டல் பரிதாபங்கள்!

டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்தில் அரங்கேறிய சம்பவங்களின் தொகுப்புதான் இது.


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாமதமாக வந்த உடன் அமைத்ததுதான் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இரவு விருந்து என்பது. கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை பாஜக சரியாக நடத்தவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே அப்போது தர்மசங்கடங்களை தடுக்கவே டெல்லியில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலான அசோகாவில் தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தார் அமித்ஷா. இதில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் காலையிலேயே டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

மாலை 6 மணி அளவில் விருந்து நடைபெறும் அசோகா ஹோட்டலுக்கு வந்து விடுமாறு அனைத்து தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை சரியாக ஐந்தரை மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அசோகா ஹோட்டலில் சென்றடைந்தனர். ஆறரை மணி அளவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.

அதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரே, சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு இருந்தனர். இதேபோல் மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் அனைவருமே அங்கு வருகை தந்திருந்தனர்.

மோடி அமித்ஷா வருகைக்குப் பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மேடையில் ஏற அனுமதிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் மேடை ஏற்றப்பட்டார். ஆனாலும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.  சிறிது நேரத்திற்கு பிறகு மோடி மற்றும் அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைத்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி கைகளைப்பற்றி மோடி ஏதோ கூறினார்.

இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி மேடையிலிருந்து இறங்கினார். தொடர்ந்து தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் பிறகு தங்களின் வியூகம் குறித்து அமித்ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான கருத்துக் கணிப்புகள் வெளியானதால் தமிழகத் தலைவர்கள் மற்றும் மௌனமாக அமர்ந்திருக்க காண முடிந்தது.