ரத்த வாந்தி..! கழிவறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த முகமது ஷரீப்..! சென்னை கொரோனா மையத்தில் பயங்கரம்!

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ரத்த வாந்தி எடுத்து கழிவறையிலேயே 61 வயது முதியவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் மக்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதையும் கடந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்கள், அரசு தனிமைப்படுத்துதல் முகாம்களில் 15 நாட்களுக்கு தங்க வைக்கப்படுகின்றார்கள். அவ்வாறு தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்ட ஒரு முதியவர் அங்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் இருந்து சென்னைக்குத் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது ஷரிப் என்னும் 61 வயது முதியவர், காஞ்சிபுரம் மாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தபோது அவருக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துள்ளார். 

தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த முஹம்மது ஷரிப், நேற்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவ உதவி கேட்டுள்ளார். ஆனால் அது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் அனுப்பும்படி அவரோடு தங்கியிருந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், அதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பொருட்படுத்தாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் முதியவர் முஹம்மது ஷரிப் ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  கொரோனா தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனிமை முகாம்களில் தனிமைப்படுத்தப்படும் வெளிநாடு திரும்பியவர்கள், அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சை, மருந்து மாத்திரைகள் போன்றவை கிடைக்காமல் தனிமை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த உயிரிழப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

மக்களின் உயிரைக் காப்பதற்கு போராடுகிறோம் என்று சொல்லும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தனிமை முகாம்களில் இருக்கும் மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு கிடைக்கும் வழக்கமான மருத்துவ சிகிச்சை கிடைக்க விடாமல் இதுபோன்ற மரணத்திற்கு காரணமாகி விடுகின்றார்கள்.. அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் ஒரு உயிர் பறிபோயுள்ளது. மிக கொடூரமான சம்பவமாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

உயிரை காப்பாற்றிக்கொள்ள தாயகம் திரும்பியவர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் தனிமை முகாமில் பலியான சம்பவத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த முதியவர் முஹம்மது ஷரீபின் குடும்பத்திற்கு ரூபாய் 20 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.