பன்னீர் சொன்ன குட்டிக் கதை! பா.ஜ.க.வை மறைமுகமாக திட்டித் தீர்க்கிறாரா? எடப்பாடியை சொல்கிறாரா..?

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பாக கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை எடப்பாடியார் திறந்துவைத்துப் பேசினார். அதையடுத்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கதை சொல்லி அனைவரையும் அலற வைத்தார்.


அப்போது அவர் சொன்ன ஒரு குட்டிக் கதை பா.ஜ.க.வுக்கு வைக்கப்பட்ட குட்டு என்று சொல்கிறார்கள். தண்ணீரின் பெருமையை முதலில் பேசினார் பன்னீர். தண்ணீர் என்பது இறைவன் நமக்களித்த வரம். இயற்கை நமக்கு வழங்கிடும் கொடை. மழையிலிருந்து உணவு உண்டாகிறது, உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன என்று பகவத் கீதை சொல்கிறது.

‘தண்ணீரிலிருந்து நாம் அனைத்து உயிரினங்களையும் படைத்தோம்’ என்பது திருக்குர்ஆனில் அல்லா அருளிய இறைமொழியாகும். ‘பூமியானது, நீரிலிருந்து நீரினால் உண்டாக்கப்பட்டுள்ளது’ என்கிறது, புனித விவிலியம். 

 இன்று நவீன உலகின் வணிக நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நீரை வெகுவாக பயன்படுத்துகின்றன. இவ்வாறு, மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் கழிப்பறை, குளியலறை, சமையலறை ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டும், வணிக நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்திய பின்னும், மாசு அடைந்த தண்ணீர், கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுப்படாமல் தடுக்க வேண்டியதும், அந்த கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து முறையாக மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டியதும், இன்றைய காலத்தின் கட்டாயமாகும். 

இன்று தொடங்கப்படும் இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக தினசரி 40 மில்லியன் லிட்டர், மூன்றாம் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர், தற்போது வழங்கப்பட்டு வரும் நன்னீருக்குப் பதிலாக வழங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நன்னீர், சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்ற பன்னீர் ஒரு கதை சொன்னார். 

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும், நண்பர்கள்தான் என்றாலும், தொழில் முறையில் ஒருவர் பணக்காரர், முதலாளி. இன்னொருவர் அவருக்கு கீழே பணியாற்றும் தொழிலாளி, ஏழை. இரண்டு பேர்களும், ஒரு முறை தங்களது வியாபார விஷயமாக போகும் போது, ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று.

அப்படி பாலைவனத்தில் போய்க் கொண்டிருந்த போது, மதியம் சாப்பிட வேண்டிய நேரம் வந்தது. இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்த நேரத்தில், பணக்காரனின் சிந்தனையில், தான் என்னும் அகந்தை துளிர்விட்டது. உடனே ஏழை தொழிலாளியை பார்த்து, அவன் தனது நண்பன் என்பதையும் மறந்து, ‘கொஞ்சம் பொறு, நான் முதலில் சாப்பிட்டு விடுகிறேன். பிறகு நீ சாப்பிடலாம்’ என்று தனது பணக்கார தோரணையை காட்டினான். 

அதை புரிந்து கொள்ளாத ஏழை, ‘ஏன், நாம் சேர்ந்து சாப்பிட்டால் என்ன?’ என்று கேட்டதும், கோபம் தலைக்கேறி ஏழையின் மனம் நோகும்படி மிகக் கடுமையான வார்த்தைகளால் ஏசினான். இந்த சுடுசொற்களை கேட்ட ஏழை, தனது இயலாமையால் மனம் வருந்தி, ‘இன்று எனது நண்பன் என்னை கண்டபடி திட்டி மனம் நோகச் செய்துவிட்டான்‘ என்று அந்த பாலைவன மணலில் எழுதி வைத்துவிட்டு நடந்தான்.

கொஞ்ச தூரம் சென்றதும், முன்னால் போய்க் கொண்டிருந்த முதலாளிக்கு தாகம் எடுத்தது. உடனே தண்ணீர் குடிக்க குடுவையை எடுத்தபோது, அதில் தண்ணீர் தீர்ந்து விட்டதை அறிந்தான். பின்னால் வந்துக் கொண்டிருந்த ஏழை தொழிலாளியிடம், உன் குடுவையில் தண்ணீர் இருக்கிறதா, என்று கேட்டான் அவனது தண்ணீரும் தீர்ந்து விட்டிருந்தது. தாகம் வாட்டி எடுக்க அப்படியே நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஓரிடத்தில் தண்ணீர் இருப்பதை கண்ட பணக்காரன், ஓடிச் சென்று குடிக்க முற்பட்டான். 

அப்போது, திடீரென தன்னை பின் தொடர்ந்து வரும் நண்பனை பற்றிய நினைவு அவனுக்கு வந்தது. இவ்வளவு காலம் நன்றாக பழகிய நண்பனை, கடுமையான வார்த்தைகளால் மனம் நோக வைத்துவிட்டோமே என்று வருந்தி, மனம் திருந்தி, சத்தமிட்டு அவனை அழைத்து அந்த தண்ணீரை இருவரும் பகிர்ந்து உண்டு தாகம் தீர்த்துக் கொண்டார்கள். உடனே அந்த ஏழை நண்பன், அங்கிருந்த ஒரு கல்லில், ‘என் நண்பன் இன்று மறக்கமுடியாத ஒரு உதவி செய்தான்’ என்று எழுதினான்.

அப்போது, இவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு பாலைவன தேவதை, அவன் முன் தோன்றி, ‘அவன் உன் மீது கடுமையான வார்த்தைகளை வீசி நோகடித்த போது, மணலில் எழுதி வைத்தாய், உதவி செய்த போது கல்லில் எழுதி வைக்கிறாய், அது ஏன்? என்று கேட்டது.

அதற்கு அந்த ஏழை நண்பன், ‘செய்த நன்றியை என்றும் மறக்கக்கூடாது என்று கல்லில் எழுதி வைத்தேன். என்னை குறை கூறி கடுஞ்சொற்களால் சொன்ன வார்த்தைகள், காற்றோடு போக வேண்டியவை. அதனால் மணலில் எழுதி வைத்தேன்’ என்று சொன்னான்.  

அதைப் போல, எதிர்கட்சிகள் நம்மைப் பார்த்து கூறுகின்ற குறைகளும், குற்றச்சாட்டுகளும், மணலில் எழுதப்படும்! அவை காற்றோடு கரைந்து போகும் என்று சொன்னாலும், அவர் பா.ஜ.க.வுக்காகவே இந்தக் கதையை சொன்னதாகத் தெரிவிக்கிறார்கள். எடப்பாடிக்காக சொல்லப்பட்டதும் என்றும் சொல்கிறார்கள். எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.