மோடிக்கு எடப்பாடியாரின் ட்வீட்! 2 மணி நேரத்தில் அவுட்! காரணம் தெரியுமா?

தமிழுக்காக தி.மு.க. மட்டும்தான் போராடுமா? அ.தி.மு.க.வும் அதைவிட பெரிதாகப் போராடும் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கெத்து ட்வீட் தமிழக அரசியலை கலங்கடித்தது.


ஆம், தீபாவளி, பொங்கல், ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்கும் அரசு உதவிகளை சொல்வதற்கு மட்டும் ட்வீட் செய்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அக்கவுன்டில் இருந்துதான் அப்படியொரு ட்வீட் வந்தது. ஆங்கிலத்தில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பியிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அந்த ட்வீட்டில், மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்பத் தேர்வு மொழியாக்குவதற்கு பரிந்துரை செய்யுங்கள். இது, உலகிலேயே பழைமையான தமிழ் மொழிக்கு நீங்கள் செய்யும் சேவையாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்திக்கு எதிராக தி.மு.க.வினர் போராடி நல்லபெயர் வாங்கிவரும் வேளையில், நம் பங்குக்கு தமிழுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டுத்தான் இப்படி ஒரு ட்வீட் போடப்பட்டதாம்.

ஆனால், இந்த ட்வீட்டைப் பார்த்து பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, அ.தி.மு.க.வினர் டென்ஷன் ஆகிவிட்டனர். அதெப்படி மோடிக்கு கட்டளை போடுவது போன்று இப்படி ஒரு ட்வீட் போடலாம், ஏற்கெனவே நித்ய கண்டம் பூரண் ஆயுஸ்னு தினமும் செத்துப் பிழைக்கிறோம், இந்த லட்சணத்துல தமிழுக்கு இப்படி ஒரு ட்வீட் தேவையா என்று பலரும் கேட்டிருக்கிறார்கள்.

உடனே பதறிப்போன எடப்பாடியார் தரப்பு, ‘யாரும் பார்க்கிறதுக்குள்ள அதை டெலிட் பண்ணிடலாம்’ என்று உடனடியாக அகற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது பா.ஜ.க. சார்பில் யாராவது கேட்டால் என்ன சொல்வது என்று பதறியிருக்கிறார். அதான், அவங்க கட்சியிலேயே ஹெச்.ராஜா நமக்கு வழி காட்டியிருக்காங்களே... அது நான் போடல, என்னோட அட்மின் போட்டுட்டான்னு சொல்லுங்க என்று எஸ்கேப் வழி காட்டிய பிறகுதான் எடப்பாடியாருக்கு நிம்மதியே வந்ததாம்.

என்னடா இது நாட்டுல தமிழுக்கு ஆதரவா ஒரு ட்வீட் போட முடியல...