சேலத்தில் முடங்கிய எடப்பாடி! குமரியில் முகாமிட்டுள்ள கட்கரி! என்ன நடக்கிறது தமிழக அரசியலில்?

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஒரு வார காலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுலகத் தொடர்புகள் பெரிதும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். சென்னையில் இருந்தபோது ஒரே ஒரு நாள் தலைமைச் செயலகம் சென்ற எடப்பாடி அதன் பிறகு அந்தப் பக்கமே செல்லவில்லை. வீட்டிலிருந்த படியும் கூட பெரிய அளவில் தலைமைச் செயலக பணிகளை அவர் மேற்கொண்டதாக தெரியவில்லை. 

இதனைத் தொடர்ந்து சேலத்திற்கு பாலம் திறப்பு விழாவிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். வழக்கமாக சேலத்தில் அதிக நாட்கள் தங்கி இருக்கும் போது தனது குலதெய்வம் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் எடப்பாடி இந்த முறை தனது வீட்டிலிருந்து வெளியே வரவே இல்லை. இதற்கான காரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.

இந்த நிலையில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திடீரென கன்னியாகுமரி வந்துள்ளார். கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க குடும்பத்துடன் நிதின் கட்கரி வந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொளுத்தும் வெயில் அடிக்கும் மே மாதத்தில் நிதின் கட்கரி கன்னியாகுமரிக்கு வர வேண்டிய அவசியம் என்ன என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கொளுத்தும் கோடை வெயிலில் பொதுவாக நிதின் கட்கரி போன்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் குளுகுளு பிரதேசங்களை தேடி செல்வது வாடிக்கை. ஆனா கன்னியாகுமரியில் நிதின்கட்கரி சுற்றிப் பார்க்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று பாஜகவினரே ஆச்சரியப்படுகின்றனர்.

தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தமிழகம் வந்திருப்பது மாநில அரசியலில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.