அம்மாவின் 72வது பிறந்தநாளுக்கு 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் எடப்பாடி பழனிசாமி. போன வருடம் நடப்பட்ட 71 லட்சம் மரங்கள் எங்கே போயின..?

இன்று தமிழகம் முழுவதும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. சார்பாக புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளுக்கு, 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.


சென்னை தலைமை செயலகம் எதிரே மகிழம் மரக்கன்றை நட்டுவைத்து, இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர். அப்போது எடப்பாடி தெரிவித்த ஒரு கணக்குதான் அத்தனை பேரையும் அதிர வைத்துள்ளது.

ஆம், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு மரக்கன்றுகள் நடப்படும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2012 முதல் ஜெயலலிதா வயதுக்கு ஏற்ப 64 லட்சத்தில் தொடங்கி இன்று 72 லட்சமாக நிற்கிறது.

இதில் சாதாரண குடிமக்களுக்கு வரும் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான். இப்படி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மரம் நடப்பட்டுவருகிறது என்றால், தமிழகத்தில் இன்று எத்தனை மரங்கள் சென்னையில் மட்டும் இருக்க வேண்டும்? அந்த மரங்கள் எல்லாம் எங்கே போயின..?

72 லட்சம் மரக் கன்றுகள் என்று கணக்கு எழுதி காசை எடுப்பதற்குத்தான் இப்படி திட்டங்கள் தீட்டப்படுகிறதா..? இதற்கு பதில் சொல்பவர்கள் யார்?