கூட்டணி கட்சிகளை சமாளிப்பதில் சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி.

மதுரைக்கு வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தனது வாயாலேயே எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்தார். இந்த விஷயத்தில் பா.ஜ.க.வை இறங்கிவர வைத்த பெருமை முதல்வர் எடப்பாடியைத்தான் சேரும் என்று பா.ஜ.க.வினரே ஆச்சர்யம் காட்டுகின்றனர்.


ஏனெனென்றால்,, முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்ற ரீதியில் தமிழக பா.ஜ.க.வினர் பேசி வந்தனர். ஆனால், இது பற்றியெல்லாம் எடப்பாடி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதே சமயம் அவரது கண்ணசைவில் ’எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மட்டும் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும். மற்றவர்கள் வெளியேறலாம்’ என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி காட்டிய அதிரடியால், பாஜக மட்டுமல்லாது பாமக , தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே ஜெர்க் ஆயின.

அப்படி கே.பி.முனுசாமி பற்றவைத்த நெருப்பால்தான் பா.ஜ.க இறங்கி வந்தது. பா.ஜ.க.வை கையாள்வதில் எடப்பாடி எக்ஸ்பர்ட்டாக திகழ்கிறார்’’ என வியப்புடன் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இன்னொருபுறம் பாமக, தேமுதிக மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளும், தேர்தலில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. குறிப்பாக பாமக, வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரி அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி இந்த விவகாரங்களை பதற்றமே படாமல், லாவகமாக டீல் செய்து வருகிறார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை அனுப்பி, ராமதாஸுடன் நேரில் பேச வைத்துள்ளார். அவர்கள், இப்போதைக்கு அரசால் என்ன செய்ய முடியும் என்கிற எதார்த்த நிலையைச் சொல்லி புரிய வைத்தனர். இதனையடுத்து பாமக அமைதியானது.

அதேபோன்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், அதிக இடங்களை எதிர்பார்த்து எக்குத்தப்பாக பேசி வந்தார். ஆனால், தேமுதிகவுக்கு தற்போதுள்ள வாக்கு சதவீதம் உள்ளிட்ட சில விஷயங்களை தூதர்கள் மூலம் தெளிவாக எடுத்துரைத்து எடப்பாடி கறார் காட்டியிருக்கிறார். இதனையடுத்தே அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என பிரேமலதா பிளேட்டை மாற்றி போட்டுள்ளார். அதே போன்று அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் இந்தத் தேர்தலில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே எடப்பாடி அடுத்தடுத்து அடிக்கும் சிக்ஸர்களைப் பார்த்து திகைத்துப் போய் நிற்கிறது எதிர்க்கட்சியான தி.மு.க. என்றால் அது மிகையில்லை.