பிரச்சாரத்தில் கத்தி திரைப்பட வசனம்! விஜய் ரசிகர்களை தெறிக்க விட்ட எடப்பாடியார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கத்தி பட வசனத்தை பேசி வாக்குச் சேகரித்தார்.


வாக்குப் பதிவுக்கு  இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் வெற்றி கன்னியை எட்டிப் பறித்து விடும் தீவிரத்துடன் எதை வேண்டுமானாலும் பேசி வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்தப் பேச்சுகளில் சில சுவாரசியமாகவும் இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாகவே காணப்படுகிறது

அந்த வரிசையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சில வெடிகளை கொளுத்திப் போட்டு வருகிறார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கண்ணுக்கே தெரியாத காற்றிலே ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர் என கத்தி திரைப்பட வசனத்தை காப்பியடித்துப் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு பிரச்சாரக்கூட்டத்திலும் கற்பனை கதைகளை பேசி வருவதாகத் தெரிவித்த அவர், பா.ஜ.க. வுடன் தி.மு.க. கூட்டணி வைத்த போது அந்த கட்சி மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக சிவகாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னை "பட்டாசு உற்பத்தியாளர்கள் சந்தித்ததாகவும் அவர்களிடம் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.