முதல்வர் எடப்பாடியின் சிந்தனையும் செயலும் அற்புதம்..! வீட்டில் இருந்தே பூம்புகார் பொருட்களை வாங்கலாமே..!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு புதுமை நிதி திட்டத்தின் கீழ் (TANII) தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மற்றும் மெய்தோற்ற கைப்பேசி செயலியை துவக்கி வைத்தார்கள்.


பூம்புகார் என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், பொதுத் துறை நிறுவனமாக தொடங்கப்பட்டு, 1973ஆம் ஆண்டு முதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக கைவினைஞர்களின் கடும் உழைப்பினால் பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதோடு, கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த பயிற்சி அளித்தல், கைவினைஞர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை உயர்த்துதல், வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல், கைவினைஞர்களுக்கு சமூக பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றை முக்கிய குறிக்கோள்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம் மூலம் தமிழக கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் முப்பரிமாண முறையில் பார்க்க முடியும். இந்த மெய்நிகர் தோற்ற தொழில் நுட்பத்தை விமானநிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் அமைத்து கைவினைப் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த இயலும்.

குறிப்பாக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பம் மூலம் அக்கைவினைப் பொருட்களை அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லாமலே, அவற்றை முப்பரிமான வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் பார்த்து இணையதள வழியாக வாங்கக்கூடிய வசதி இதில் செய்யப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.