அ.தி.மு.க. மட்டும் தான் உண்மையான ஜனநாயக கட்சி.! எடப்பாடி பழனிசாமி முதல்வர் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்.

அ.தி.மு.க.வுக்கு இன்று ஒரு பொன்னான நாள் என்றுதான் சொல்லவேண்டும். இன்று, கோடானு கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சங்களில் பால்வார்க்கும் அறிவிப்பை துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார்.


ஆம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பிற கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால், ஒரு முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பது மிகப்பெரிய விருது போன்றது. அதனை முடிவு செய்வதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து, ஒரு தெளிவான முடிவு எட்டப்பட்டுள்ளது. 

ஏனென்றால் இன்று தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளருக்கு யாரும் போட்டி போடவே முடியாது. ஆனால், அ.தி.மு.க.வில் மட்டும்தான் யார் முதல்வர் என்ற போட்டி வந்து, அதில் சிறந்த முடிவும் எட்டப்பட்டுள்ளது. 

இந்த சமரச முயற்சியில் பெரிதும் பங்கு வகித்த அதிமுக மூத்த நிர்வாகி நம்மிடம், ‘’கட்சியைப் பொறுத்தவரை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலங்களும், தற்போதைய சூழலும் வெவ்வேறானவை. கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த 4 ஆண்டுகளாக கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றி வருவதில் முதல்வர் எடப்பாடிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆட்சி திறனால், எளிமையான அணுகுமுறைகளால் எல்லோரையும் கவர்ந்துவரும் அவரைத் தவிர முதல்வர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் யாரும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

 எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவை அபரிமிதமாகப் பெற்றுள்ள எடப்பாடி இதை தன்னிச்சையாகவே அறிவிக்கச் செய்திருக்கலாம், ஆனால் கட்சியின் நலன் கருதி அவர் அப்படி செய்யவில்லை.

 ஒன்றுக்கு பலமுறை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, வழிகாட்டு குழு அமைக்கவும் ஒப்புக்கொண்டு..,இறுதியாக பன்னீர்செல்வத்தையும் இணங்கச் செய்து அவரை விட்டே அந்த அறிவிப்பையும் வெளியிடச் செய்ததன் மூலம் தான் ஒரு உயர்ந்த ஜனநாயகவாதி என்பதை எடப்பாடி நிரூபித்துவிட்டார். இந்த மாதிரியான காட்சிகளை திமுகவில் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி குடும்பத்தின் பிடியிலேயே அந்த கட்சி இன்னமும் உள்ளது…’’ என்று கூறியுள்ளார்.