தமிழ் அறிஞர் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் அஞ்சலி..!

தமிழ் பதிப்புலகத்தின் முன்னணி பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் ஆசிரியருமான திரு. க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அன்பும், எளிமையும், கடின உழைப்பும் மிகுந்த க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் விளம்பரத் துறையில் பணியாற்றி, பின்னர் தனது 30-வது வயதில் பதிப்பக துறைக்கு வந்தவர். இவர் 1974-ம் ஆண்டு க்ரியா பதிப்பகத்தை துவங்கினார். தனது க்ரியா பதிப்பகம் மூலம் தற்கால தமிழுக்கான அகராதி ஒன்றை வெளியிட்டார். இந்த அகராதி தமிழ் பதிப்புலகத்தில் பெரும் சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் என பல தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர் பல்வேறு பிறமொழி புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமைக்குரியவர்.

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பதிப்புலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.