அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்… கூட்டணிகள் இதையே ஏற்க வேண்டும். கேபி.முனுசாமி அதிரடி.

அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகள் வெளிப்படையாக பாராட்டு தெரிவிக்கவில்லை.


இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி. அப்போது அவரிடம் கூட்டணிகள் எடப்பாடியை ஏற்றுக்கொண்டார்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு கே.பி.முனுசாமி, ’’தேசிய கட்சியாக இருந்தாலும், மாநிலக் கட்சியாக இருந்தாலும் சரி அதிமுக அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள் தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நிச்சயம் எங்களது கூட்டணியில் இருக்க முடியாது” என திட்டவட்டமாகத் தெரிவித்தார் கே.பி.முனுசாமி.

அதேபோன்று வழிகாட்டுதல் குழு பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ‘’11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவுக்கான அதிகாரங்கள் என்ன என்பதை தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள். இந்தக் குழு தன்னிச்சையாக செயல்படமுடியாது. கட்சியின் முழு அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும்தான் இருக்கிறது. ஆகவே, அந்தக் குழு ஆலோசனை வழங்கும் குழுவாக மட்டுமே இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.