மூன்று கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேரண்டி..! முடிவுக்கு வருமா இஸ்லாமியர்கள் போராட்டம்.

டெல்லியில் நடந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு வண்ணாரப் பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீஸ் அத்துமீறி நடந்துகொண்டது.


அன்றே இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். வண்ணாரப் பேட்டையில் இஸ்லாமியர்கள் 20வது நாளாக போராட்டம் நடத்திவருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவதற்கு மோடி மரசு முயற்சிகள் மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி இஸ்லாமிய மக்களுக்கு ஓர் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அதாவது, தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள ஒரு இஸ்லாமியருக்கு கூட பாதிப்பு இருக்காது. தனது தலைமையிலான அதிமுக அரசு, இஸ்லாமியர்களின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

தேசிய மக்கள் பதிவேட்டில், பெற்றோர்களின் பிறந்த இடம், அதுகுறித்த ஆவணங்கள் உள்ளிட்ட 3 முக்கிய கேள்விகள் கேட்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன். ஆகவே, மாநிலத்தின் பலபகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய பெண்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, அரசுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கவேண்டும்.

தமிழ்நாடு, அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இங்கு ஜாதி மதம் பேதம் உள்ளிட்டவைகளை கடந்து சகோதர உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரண் ஆகவே மாநில அரசு உள்ளது. நான் இதை சட்டபையிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த அரசின் நல்லாட்சியை பொறுக்கமுடியாத சிலர், அரசியல் ஆதாயங்களுக்காக, தவறான தகவல்களை பரப்பிவிட்டு, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த முயல்கின்றனர்.

மக்கள் இதுபோன்ற சக்திகளிடம் சிக்காமல், அவர்கள் பரப்பும் தவறான தகவல்களுக்கு செவிசாய்க்காமல், ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி கூறினார். முதல்வரின் கோரிக்கையைக் கேட்டு போராட்டத்தை கைவிடுவார்களா இஸ்லாமியர்கள்..?