“அண்ணனுக்கு 70 வயசு.. அவரால குனிய முடியல”- அமைச்சர் சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி நற்சான்று

மூடிய அறையில் செருப்பு விவகாரத்தை பேசிமுடித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் செயலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியாயப்படுத்தி பேசியுள்ளார்.


சேலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவுக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்குச் சென்ற அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இக்கருத்தைத் தெரிவித்தார்.

சீனிவாசனின் விவகாரம் குறித்து கேட்டபோது, இதை பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் பெரிதுபடுத்திவிட்டன என ஒரேபோடாகப் போட்டார், சிரித்துக்கொண்டே. இது தொடர்பான கேள்வி எழுப்பியபோது, சில மணித்துளிகள் யோசித்தபடியே கவனமாக வார்த்தைகளை விட்ட அவர், “ வனத்துறை அமைச்சர் அண்ணன் சீனிவாசன், வயது மூத்தவர். அவருக்கு 70 வயசு அவரால் குனியமுடியவில்லை. கால் விரல்களுக்கு இடையில் முள்குச்சிபோல ஏதோ குத்திவிட்டது.

அருகில் உள்ள சிறுவர்களை அழைத்துள்ளார். அவரே சொல்லியிருக்கிறார்.. பேரன் வயதில் இருப்பவர்கள்... என்று. வருத்தமும் தெரிவித்துவிட்டார். இதை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பெரிதுபடுத்திவிட்டார்கள்.” என்று சிரித்துக்கொண்டே சொல்லிமுடித்தார். 9, 11 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்யப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது.

இதைப் பற்றிக் கேட்டதற்கு, “ தேர்வு என்பதே தகுதியை நிர்ணயிப்பது. தேர்வே கூடாது என்றால் எப்படி தகுதியை நிர்ணயம்செய்வது? தேர்வே இல்லாமல் எல்லாரும் பாசாகிவிட்டால் தகுதியை எப்படி தெரிந்துகொள்வது? பிள்ளைகள் ஊரிலேயே இருக்கவேண்டியதுதான்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கேட்டவர் பொதுத்தேர்வைப் பற்றிதான் குறிப்பாகக் கேட்டார்; அவரோ தேர்வு கூடாது என்பதாக, அதற்கு பதில்கூறுவதைப் போல இப்படி கருத்துத் தெரிவித்தார்.