சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி…!

தமிழ்நாட்டையே உலுக்கிய விவகாரம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம்.


ஊரடங்கு விதிகளை மீறி கடை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வியபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் கஸ்டடியில் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, தொடர் சிகிச்சை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு உயிர் இழந்தனர்.

தமிழகத்தை அதிரவைத்த இந்த சம்பவத்தை முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவு போட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அது மட்டுமின்றி, குடும்பத்தாருக்கு அரசு சார்பில் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

அப்போது, உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார்.

பணி ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, ‘’தனது தந்தை, சகோதரர் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு உதவும் என்றும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.