அகோரப் பசியில் உள்ளது தி.மு.க., கொள்ளை அடிப்பதுதான் தி.மு.க.வின் கொள்கை... எடப்பாடி பழனிசாமி கிடுகிடு குற்றச்சாட்டு.

தேர்தல் பரப்புரையை தமிழகமெங்கும் படு ஸ்பீடாக செய்துவருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.


அப்போது அவர், ‘‘கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி திறமையான கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நமது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும், என்னை பற்றியும் பொதுமக்களிடம் அவதூறு பரப்பி வருகிறார். அ.தி.மு.க. கட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தி.மு.க.வினருக்கு கொள்ளையடிப்பதுதான் குறிக்கோளாக உள்ளது. கருணாநிதி முதல்-அமைச்சரான பிறகுதான் தமிழகத்தில் ஊழல் பெருத்துவிட்டது. அதற்கு முன்பு தமிழகத்தில் ஊழல் கிடையாது. ஊழல் பெருத்த கட்சி தி.மு.க.தான். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. என பொதுமக்களிடம் பொய் பிரசாரம் செய்து மக்களை குழப்பி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் நாங்கள் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தற்போது தனி மாவட்டமாக அறிவித்துள்ளோம். கள்ளக்குறிச்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைபூங்கா அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளேன்.

தி.மு.க. கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. தற்போது அவர்கள் கோர பசியில் உள்ளனர். ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்வார்களா? என்று நீங்கள் எண்ணிபார்க்க வேண்டும். தி.மு.க.வினர் காவல்துறையை மிரட்டுகின்றனர். ஸ்டாலினின் மகனான உயதநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். வந்தால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியுமா? என காவல்துறையை எச்சரிக்கிறார்.

காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் நிலை என்னவாகும். தி.மு.க. அராஜக கட்சி. அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது. தி.மு.க.வில் உள்ளவர்கள் குண்டர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஓட்டல்களில் சென்று பிரியாணி, பரோட்டா ஆகியவை சாப்பிட்டுவிட்டு கடைக்காரர் பணம் கேட்டால் காசு கொடுக்காமல் அவர்களை தாக்குவார்கள்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலையாக உள்ளது. இந்தியாவிலேயே சட்டஒழுங்கில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது என்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.