எடப்பாடி பழனிச்சாமி எஸ்.பி.பி.க்கு மரியாதை மற்றும் தமிழ் பள்ளிக்கு பொறுபேற்பு! வெகுவேக நடவடிக்கை!

தமிழகத்தில் மட்டும்தான் கொரோனாவைத் தாண்டியும் அரசு பல்வேறு விஷயங்களில் உடனுக்குடன் அதிரடி ஆக்ஷன் மேற்கொண்டுவருவதாக அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். அதுவும் சமீபத்தில் எஸ்.பி.பி. மறைவுக்கும், குஜராத் தமிழ் பள்ளிக்கும் எடப்பாடியார் மேற்கொண்ட முயற்சிகள், அடடே அபாரம் என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளன.


காந்தர்வக் குரலோன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்ததும், அஞ்சலி செய்தி அனுப்பியதுடன் நின்றுவிடாமல், அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்ற எஸ்பி.பாலசுப்பிரமணியத்தை, கட்சியை மீறி மதிப்பு தரவேண்டும் என்ற எண்ணம் முதல்வரின் அறிவிப்பில் வெளியானது. இந்த அறிவிப்பைக் கேட்டு எஸ்.பி.பி.யில் கோடிக்கணக்கான ரசிகர்கள் முதல்வரை பாராட்டி வருகின்றனர்.

அதேபோன்று, குஜராத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்ட விஷயத்திலும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள மணி நகரில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்வழி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாகக் கூறி இந்த பள்ளியை மூடுவதற்கு குஜராத் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நேரடி ஆக்ஷனில் இறங்கினார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

அதில் ‘’இந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டால், அந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும். தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, நீங்கள் தலையிட்டு, அந்தப் பள்ளிக்கூடம் தொடர்ந்து நடைபெறச் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிக்கூடத்துக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

தமிழ் மொழி, சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளை குஜராத் அரசு பாதுகாக்கும் என நம்புகிறேன்’’ என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சரின் இந்த கடிதத்திற்கு விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். உடனுக்குடன் ஆக்ஷன் என்றால் அது, அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம்.