ஸ்டாலின் பிரசாரம் புஸ்ஸ்ஸ்.... எடப்பாடி பிரசாரம் டாப்

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இல்லாத தி.மு.க., எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஆனால், ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் பேச்சுக்களே, கட்சியை தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளே புலம்பிவருகிறார்கள்.


அறிவாலயத்துக்கு நெருக்கமான திமுக கூட்டணி கட்சித் தலைவர் ஒருவரிடம் கேட்டோம். ‘‘எடப்பாடி பழனிசாமி இயல்பாக பிரசாரம் செய்து, சிக்ஸராக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஸ்டாலினும் ஒன்றிணைவோம் வா, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் என விதவிதமாகத்தான் பிரசாரம் செய்து பார்க்கிறார்.

ஆனால் அவரது துரதிர்ஷ்டம் எதுவும் எடுபட்டதாக தெரியவில்லை. கிராமசபை கூட்ட பிரசாரத்தின்போது, பல இடங்களில் பொதுமக்களிடமிருந்து ஸ்டாலின் வாங்கிக் கட்டிக்கொண்டார். 

மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என எல்லா தரப்பையும் மனம்குளிர செய்யும் வகையிலான திட்டங்களை அறிவித்து, அவர்களையும் அதிமுகவுக்கு ஆதரவாக எடப்பாடி திருப்பிவிட்டார். மொத்தத்தில் ஸ்டாலின் பிரசாரம் செல்ஃபே எடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என போட்டு உடைத்தார். 

கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இப்படி என்றால், திமுகவினருமே ’’ எங்கள் கைக்காசைப் போட்டு லட்சக்கணக்கில் செலவழித்தும் ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லையே!’’ என புலம்பி வருகின்றனர்.

கொரோனா காலத்தில் ’ஒன்றிணைவோம் வா’ என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவை ஏற்படுத்தி விட்டார்கள். இப்போது ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மேற்கொள்ளும் பிரசாரங்களுக்கும் வாகன ஏற்பாடுகள், ஆட்களை அழைத்து வருவது என லட்சக்கணக்கில் செலவாகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருந்து குறைந்தது 20 வாகனங்களாவது வர வேண்டும் என அறிவாலயத்திலிருந்து உத்தரவு போடுகிறார்கள். அப்படி கடன் வாங்கி செலவழித்து கூட்டம் போட்டாலும் ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதுதான் வேதனை.