கோரப் பசியில் இருக்கிறார் ஸ்டாலின்.. மக்களையே சாப்பிட்டுவிடுவார்... எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார்.


ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவுடைய அரசு. வருகின்ற 27-ஆம் தேதி நாம் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தை திறக்க இருக்கின்றோம். அம்மா மீது ஆணையிட்டு சொல்கின்றோம், இப்போது வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெறும்.

நீங்கள் கனவை மட்டும் காணலாம். நிச்சயம் நடக்காது. கனவை மட்டுமே காண முடியும் ஸ்டாலின் அவர்களால். இதே போலத் தான் நான் முதலமைச்சராக பதவியேற்றப் போதும் கனவு கண்டார். இந்த ஆட்சி 10 நாட்களில், ஒரு மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று. ஆனால் தற்போது நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதேபோல் தான் இப்போதும் நீங்கள் காணுகின்ற கனவு, எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது. மீண்டும் அம்மாவுடைய ஆட்சி தான் தமிழகத்திலே மலரும். மக்களின் ஆதரவோடு தொடர்ந்து அம்மாவுடைய அரசு ஆட்சி அமைக்கும். 

ஸ்டாலின் அவர்களே. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களுக்கும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து மாவட்ட மக்களை சந்தித்தேன். மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை ஆகியோரின் கருத்துக்களுக்கேற்ப தக்க ஆலோசனை வழங்கியது எங்கள் அரசு. இதை மறுக்க முடியுமா?

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டைப் போல மற்ற மாநிலங்களும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சுகூ-ஞஊசு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு. இதை மறுக்க முடியுமா?

அண்ணா திமுக ஆட்சியில் ஊழல் என்று சொல்கிறார். எந்த இடத்திற்கும் வா, ஆனால், துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும். யாராவது எழுதிக் கொடுத்ததை படிக்கக்கூடாது. எந்தத் துறையில் என்னென்ன என்று சொல், நான் பதில் சொல்கிறேன். அதற்குத் தயாராக இல்லை, ஆனால், வழக்கை வாபஸ் வாங்கு என்கிறாய். வழக்கிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். நீ தானே புகார் கொடுத்தாய். அந்தப் புகாரில் என்னென்ன குற்றச்சாட்டு இருக்கிறதோ அதற்கு நான் பதில் சொல்கிறேன். ஆனால் வரமாட்டேன் என்கிறார். மாண்புமிகு ஆளுநரிடம் பொய்யான அறிக்கை தயார் செய்து கொடுத்தார். 

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாலை டெண்டர் ஒன்றை திருநெல்வேலியில் கேன்சல் செய்துவிட்டார்கள். அதுகூட தெரியாமல், அதில் 700 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லி எதிர்க்கட்சித் தலைவர், திமுக-வின் தலைவர் பொய் அறிக்கை கொடுத்துள்ளார். படித்துப் பார்த்தால்தானே தெரியும், நாட்டைப் பற்றியே தெரியாத ஒரு தலைவர் திமுக தலைவர்.

அப்படியானால் எவ்வளவு எரிச்சலுடன் அவர் உள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கோரப் பசியில் இருக்கிறார். சிறிது ஏமாந்தாலும் மக்களையே சாப்பிட்டுவிடுவார். எப்போதும் முதலமைச்சர், முதலமைச்சர் என்று ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார். 

முதலமைச்சர் பதவியை மக்கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், நான் வேண்டாமென்று சொல்லவில்லை. நான் எப்போதும் முதலமைச்சர் என்று சொன்னதே கிடையாது. மக்களே முதலமைச்சர், மக்கள்தான் முதலமைச்சர். மக்கள் இடும் ஆணையை நிறைவேற்றுவதுதான் முதலமைச்சர் பணி என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.