புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஒரே நாளில் ஜெயலலிதா ஆதரவாளர்கள் அத்தனை பேர் மனதையும் கவரும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஆம், ஜெயலலிதா பிறந்தநாள் தினமான பிப்ரவரி 24ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு மேலும் ஒரு புகழ் மாலை. ஜெ. பிறந்த நாளை அரசு விழாவாக மாற்றிய முதல்வருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் நன்றியோ நன்றி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டி திறந்துவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் வேதா இல்லத்தையும் திறந்து வைத்தார்.
அது மட்டுமின்றி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
அத்துடன் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அதிமுக அரசு இருக்கிறது. இந்த ஆட்சியில்தான் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
அதோடு, தற்போது திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு விழாவின்போது மரியாதை செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீது எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் முதல்வர் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கொண்டாடி வருகின்றனர்.