அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தீர்மானம் போட்டு கவர்னருக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு. அதை சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் மூலம் அழுத்தம் கொடுத்துவரும் வேளையில், அதில் பங்கு வேண்டும் என்று போராட்டத்தை தொடங்கியிருக்கின்றன தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும்.
ஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை! போட்டுத்தாக்கும் எடப்பாடி பழனிசாமி.
இந்த விவகாரத்தில் எல்லாமே அ.தி.மு.க.தான் என்பதை புள்ளிவிபரத்துடன் அறிவித்து தெறிக்க விட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அரசுப்பள்ளியில் படித்த நான், சமநீதி காக்க, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து தான் கடந்த 21.3.2020 அன்று சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் "அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும்" என அறிவித்தேன்.
அதன்படி நீதியரசர் திரு.பி.கலையரசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேறி மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 5.10.2020 அன்று மேதகு ஆளுநர் அவர்களை மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்த போது, நீட் உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளேன்.
மேலும், மாண்புமிகு அமைச்சர்கள் குழுவும் மேதகு ஆளுநர் அவர்களை 20.10.2020 அன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 1,400 புதிய மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உயர்த்தியும், 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி, அதனால் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் என மொத்தம் 3,050 மருத்துவப் படிப்பு இடங்களை உருவாக்கிய மாண்புமிகு அம்மாவின் அரசைப் பார்த்து, நீட் தேர்வு என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், ”ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை” என்று கூறுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் ஆளுநருக்கு கடிதம் எழுதி, அரசியல் ஆதாயம் தேடும் செயலில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சி அடைந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள், "கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்"
என்ற எனது அறிவிப்பினால், தமிழ்நாடு அரசுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறதே என்ற அச்சத்தின் காரணமாக வழக்கம் போல் அறிக்கை அரசியல் நடத்துகிறார். இதனை பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.