இனிமே பீச்சுக்குப் போகலாம்… டிசம்பர் மாதத்துக்கு மேலும் சில தளர்வுகள்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இப்போது தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிசம்பர் மாதத்திற்கும் ஊரடங்கு அறிவித்துள்ளார்.


தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். மேலும் சுற்றுலா தலங்கள் மற்றும், பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி அவசியம்.   

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.