முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர் கூட்டு அறிவிப்பு.! தேர்தலுக்கு நாங்க ரெடி..!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க அ.தி.மு.க. தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


48 ஆண்டுகால மக்கள் பணி நிறைவுற்று, 49-ஆவது ஆண்டு தொடங்குகிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் செழித்து ஓங்கி, மக்கள் தொண்டாற்ற இருக்கும் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’என்னும் இந்த மாபெரும் பேரியக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா கொண்டாட இருக்கிறது. இந்த ஆண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள் எல்லாம் கழகப் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்திட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

பேரறிஞர் அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் நிலைநாட்ட 1972-ம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 17-ம் நாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றார்; ஆட்சி அமைத்தார். மக்களின் மனம் அறிந்து ஆட்சி நடத்தினார்.  

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நமக்கு அளித்த மாபெரும் கொடையாக, இந்த இயக்கத்தை வழிநடத்த வந்த புரட்சித் தலைவி அம்மாவும் பொற்கால ஆட்சி நடத்தினார்கள். தமிழ் நாட்டில் இதுவரை 29 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தி மக்களுக்குத் தொண்டாற்றி வருவதோடு, இன்னும் பலநூறு ஆண்டுகள் மக்களுக்குத் தொண்டாற்ற இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணிகள் வரலாற்றுப் பொன்னேடுகளில் காலமெல்லாம் மின்னிக் கொண்டிருக்கும்.  

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிக்கும் அவர்களது அன்பு உடன்பிறப்புகளான நாம், நம் இருபெரும் தலைவர்களின் மறைவுக்குப் பிறகு நம்முடைய ஒற்றுமை உணர்வாலும், திறன்மிகு உழைப்பாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், மாண்புமிகு அம்மா அவர்கள் அமைத்துத் தந்த கழக அரசையும் பொறுப்புணர்வோடு கட்டிக்காத்து வருகிறோம்.  

அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் போல, புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல, நம் இருபெரும் தலைவர்களின் அன்பு உடன்பிறப்புகளான நாமும் தேர்தல் களத்தில் தொடர் வெற்றி காண அயராது உழைப்போம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்றுச் சாதனை படைப்போம். `வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்’ என்று அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.