மோடியை எதிர்க்க தயாராகும் எடப்பாடி! சண்முகம் கொளுத்திப் போட்ட வெடி!

பன்னீருக்கு எதிராக எடப்பாடி எடுத்துவரும் காய் நகர்த்தலில், மத்திய ஆளும் பா.ஜ.க. தன் மீது அதிரடி பாய்ச்சல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கிறார் எடப்பாடி.


பன்னீருடன் மட்டும் பா.ஜ.க. நெருக்கம் காட்டும் சூழலில், தனக்கு எதிராக அம்பு எய்ய வாய்ப்பு இருக்கும் என்றே நினைக்கிறார். அதனால் தானும் மோடியை எதிர்த்து நிற்கலாமா என்ற யோசனைக்கு வந்திருக்கிறார் எடப்பாடி. பாஜ.க.வுடன் கூட்டு சேர்ந்ததால் மட்டும்தான் அ.தி.மு.க.வுக்கு இத்தனை தோல்வி வந்தது. இனிமேலும் பா.ஜ.க.வுடன் கூட்டு சேரவேண்டுமா என்ற கேள்வியை எடுத்துள்ளார்.

மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் போன்று மோடியை எதிர்த்து நின்றால், தமிழக மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என்று நம்புகிறார். இதற்கு அச்சாரமாகத்தான் சண்முகம் இப்போது பா.ஜ.க. பற்றி தைரியமாக பேச்சை எடுக்கிறார். 

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வானுார் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சி.வி. சண்முகம்,  “தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். மாநிலத்தில் யார் ஆள வேண்டும் மத்தியில் யார் ஆள வேண்டும் எனத் தீர்மானித்து தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வாக்களித்துள்ளார்கள். திமுக வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை மக்கள் அதிமுகவுக்கு அளித்த எச்சரிக்கையாக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளையில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது. அதிமுகவுக்கு வர வேண்டிய சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விட்டது.” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என்று சண்முகம் கூறியிருப்பது கட்சியில் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுத்தும் என்று எடப்பாடி பார்த்துவருகிறார். ஆக, எடப்பாடியும் மோடியை எதிர்க்க ரெடி என்கிறார்கள்.

என்னப்பா ரெய்டு ரெடியா…?