வீரபாண்டி மகனுக்கு ஆப்பு, எடப்பாடிக்கு கடுப்பு... சேலத்தில் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த ஸ்டாலின்.

நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக திமுகவில் களையெடுப்புகள், பதவி மாற்றங்கள் என அதிரடி நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.


இதன் ஒரு கட்டமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக அமைப்புக்குள் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பிரிக்கப்படாத காலகட்டத்தில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து மேலே வந்தவர், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம்.

சேலம் மாவட்டத்தின் திமுக செயலாளரான அவர், அமைச்சர் பதவியையும் பெற்றார். அமைச்சர்களிலேயே தன்னிச்சையாக முடிவெடுக்கும் சிலரில் ஒருவராக இருந்தார். அவர் இருக்கும்வரை திமுகவில் அவருக்கு பெரிய போட்டியென யாரும் இல்லை என்றாலும், பனைமரத்துப்பட்டி ராசேந்திரன் மு.க.ஸ்டாலினால் மாற்றாக முன்னிறுத்தப்பட்டார். அதையொட்டி அவருக்கும் ஸ்டாலின் தரப்புக்கும் மோதல் போக்கு உண்டானது.

அதையடுத்து அழகிரியுடன் நெருக்கம் பேணத் தொடங்கினார், ஆறுமுகம். இந்த மோதல் ஒரு கட்டத்தில் அறிவாலயத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பிரச்னையாகும் அளவுக்கு முற்றியது. ஸ்டாலின் ஆதரவாளர்களான சென்னை நிர்வாகிகள் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்துப் பேச, பதிலுக்கு அவரும் பேச கருணாநிதி(?), க.அன்பழகன் முன்னிலையில் தாக்குதல் நிலைமை ஏற்பட்டது.

அதுவே தொடர, கருணாநிதியும் ஆறுமுகமும் மறைந்துபோக, கட்சியானது ஸ்டாலினின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒருவழியாக, ஸ்டாலின் தலைமையில் சேலம் கிழக்குப் பொறுப்பாளராக வீரபாண்டி இராஜா, மைய மாவட்டத்துக்கு பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், மேற்கு மாவட்டத்துக்கு சிவலிங்கம் ஆகியோர் பொறுப்பாளர் மா.செ.களாக ஆக்கப்பட்டனர். வீரபாண்டி காலம்வரைக்கும் அவருடைய பக்கபலமாக செயல்பட்ட சிவலிங்கம், தனக்கான பாதையை தலைமையுடன் நெருக்கம் பேணி தக்கவைத்துக்கொண்டார்.

இந்நிலையில் அண்மையில் முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜாவசம் உள்ள கிழக்கு மாவட்டத்தில் திமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. எடப்பாடியின் சொந்த ஊர் அமைந்த மாவட்டத்திலும் திமுகவுக்கு வலுவைக் கூட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. மொத்த சேலத்திலும் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியால் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை விழவைக்க ஸ்டாலின் முடிவுசெய்தார்.

ஒன்று, ராஜாவை ஓரம்கட்டுவது, இரண்டு.. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு கடும் போட்டியை உருவாக்குவது, மூன்றாவது தன்னை நம்பிவந்த செல்வகணபதிக்கு மாவட்டத்தில் முக்கியத்துவம் அளிப்பது எனும் அவரின் நோக்கம் இப்போதைய பதவிமாற்றத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

சேலம் கிழக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து மாநிலத் தேர்தல் பணிக் குழுச் செயலாளராக ராஜாவும் அப்பதவியில் இருக்கும் செல்வகணபதி சேலம் மேற்கு மா.செ.ஆகவும், மேற்கு மா.செ. பதவியிலிருந்து சிவலிங்கம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.