கொரோனா எச்சரிக்கை - தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - எடப்பாடியும் சொல்லிட்டாரு!

கரோனா வைரசு தாக்க அச்சம் காரணமாக மாநிலத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இம்மாதக் கடைசிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து சில நாள்களுக்கு முன்னதாக பள்ளிக் கல்வித் துறையின் ஆணையர் தகவல் வெளியிட்டிருந்தாலும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டு இன்று முதலமைச்சரின் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் இந்தியாவில் இறந்துபோன முதல் இருவருமே வயதுபோன முதியவர்கள் என்பதும் இந்த நோய்க்கு சிறுவர்களும் எளிதாக பலியாகக்கூடும் எனும் அச்சத்தாலும் சிறுவர்கள் திரளாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு உலகமெங்கும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். தலைநகர் டெல்லியில் முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கேரள மாநில அரசும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு அதிகாரிகளும் இது குறித்து ஆலோசித்து அரசிடம் ஒப்புதல் பெற்று சில நாள்களுக்கு முன்னர், பள்ளிக்கல்வி ஆணையரின் ஆணை வெளியிடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் வகுப்புகளுக்கும் குறிப்பிட்ட எல்லையோர மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு மாதக்கடைசிவரையும் விடுமுறை விட அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பை அரசு சார்பில் முதலமைச்சர்தான் வெளியிடுவார் என உடனே மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் இதை உறுதிப்படுத்தினார். நேற்று திண்டுக்கல்லில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மழலையர் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை என்பதை உறுதிப்படுத்திவிட்டு, 5ஆம் வகுப்புவரை விடுமுறையா இல்லையா என்பதைத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் செங்கோட்டையன் கூறியபடி, முதலமைச்சர் எடப்பாடியின் பெயரில் இன்று மதியம் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ’’ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி,

கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் 31.3.2020 வரை மூடவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.