தம்பிதுரை, கோகுல இந்திராவுக்கு பெப்பே! புதியவர்களை எடப்பாடி களம் இறக்கியதன் பின்னணி!

ஜெயலலிதா ஆட்சி காலத்தில்தான் இப்படிப்பட்ட அறிவிப்புகளை எல்லாம் பார்க்கமுடியும்.


திடீரென யாரென்றே தெரியாதவருக்குப் பதவி கிடைக்கும். அவருடைய கார் கதவுகளை மாண்புமிகுக்கள் திறந்துவிடும் சூழல் ஏற்படும். அப்படித்தான் இன்று திடீரென ராஜ்யசபாவுக்கு இரண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எனக்கு மட்டும் சீட் குடுக்கலைன்னா நடக்குறதே வேற என்று தம்பிதுரை கொந்தளித்தார். அதையே கோகுல இந்திரா வேறு ஒரு வகையில் மிரட்டிவிட்டு வந்தார்.

இந்த இருவருக்கும்தான் சீட் கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்க, சம்பந்தமே இல்லாமல் முகமது ஜான், சந்திரசேகரன் என்று இரண்டு பேருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. 

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2016 தேர்தலில் மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர், திமுக வேட்பாளர் காந்தியிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது அ.தி.மு.க. சிறுபான்மையினர் அணி மாநில இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார்.

அடுத்த வேட்பாளர், சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன். இவர்  மேட்டூர் நகர அதிமுக செயலாளராக இருந்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரே தகுதி முழுக்க முழுக்க எடப்பாடி ஆதரவாளர் என்பதுதான். இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு  கருத்துவேறுபாடு இருந்தாலும், வழக்கம்போல் பன்னீர் பணிந்துவிட்டார். 

ஆக, எகிறி அடித்திருக்கிறார் எடப்பாடி. தம்பிதுரை துள்ளுவாரா அல்லது பதுங்குவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.