தண்ணீர் பிரச்னைக்குக் குரல் கொடுத்த எடப்பாடி! எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பலே பாராட்டு!

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்க துவக்க விழாவில் பேசிய.


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, உலகம் போற்றும் விவசாய விஞ்ஞானி என்று சுவாமிநாதனை பாராட்டிப் பேசினார். 1942-ம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரை பாதித்ததன் காரணமாக, இந்திய போலீஸ் பணித் துறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அந்த பணியில் சேராமல், இந்தியாவில் விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உணவு உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற தனது வாழ்நாளை வேளாண்மை முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தவர்.

இவர் மேலை நாடுகளில் வேளாண்மைத் துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்றாலும்,  உணவுப் பொருட்களை உற்பத்தி  செய்வதில் தனது தாய்நாடு பின்தங்கி இருப்பதை அறிந்து, இந்தியாவிற்குத் திரும்பினார். இவரது இடைவிடாத ஆராய்ச்சி மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக, கோதுமை மற்றும் அரிசியில் உயர் விளைச்சல் பயிர் ரகங்கள் கண்டறியப்பட்டன. 

இந்தப் பயிர் ரகங்கள் பயன்படுத்துவது பற்றிய விளக்கங்களை இவரே நேரடியாக விவசாய பெருமக்களிடம் சென்று எடுத்துரைத்துள்ளார்.  இந்த அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை விவசாயிகள் உற்பத்தி செய்ததன் காரணமாக, உணவுப் பொருள் உற்பத்தியில் பின்தங்கி இருந்த நமது நாடு, உணவு தன்னிறைவு பெற்று ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியது.

வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலைமை முற்றிலும் மாறி, தன்னிறைவு நிலையை இந்தியா அடைந்ததன் காரணமாகத்தான் இவர் பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். வேளாண்மைத் துறையில் இவர் நிகழ்த்திய சாதனையை கௌரவிக்கும் வகையில், இவருக்குக் கொடுத்த பரிசுத் தொகையை கொண்டு இந்த ஆராய்ச்சிக் கட்டளையை இவர் தொடங்கினார்.

லாப நோக்கமற்ற இந்த தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் நேரடி வேலை வாய்ப்பு  மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் விஞ்ஞானத் தொழில்நுட்ப பயன்பாடு சுற்றுச்சூழல் நிலைத் தன்மை மற்றும் சமூக அபிவிருத்திக்கு பெரிதும் பயன்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வளப்படுத்தப்பட்டுள்ளன. சதுப்பு நில காடுகள் மீட்கப்பட்டுள்ளன. 4,000 சத்துணவு பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கீழ்மட்ட அளவில் வேளாண்மை பணிகளை செய்ய நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இது போன்ற எண்ணற்ற  வேளாண் சம்பந்தப்பட்ட பணிகளை 30 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

மேலும், தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை மிக முக்கியமாக கருதப்படுகிறது. காரணம், பருவ மழை காலங்களில் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகின்ற ஆறுகளிலிருந்து கிடைக்கின்ற நீரை வைத்துத் தான் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது. சில வருடங்களில் பருவ மழை பொய்த்து விடுகின்றது.

இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து விட்டது. ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிடைக்கின்ற தண்ணீரை சேமிப்பது மிக முக்கியமாகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு நீர் மேலாண்மை திட்டத்தினை உருவாக்கி, அதன் மூலம் பருவ காலங்களில் கிடைக்கின்ற நீரை சேமிக்க வேண்டி, குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு சீர் செய்யப்படுகின்றது. அதேபோல, பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீர், ஓடை, நதிகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி தேக்கப்படுகிறது.

இதனால் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் ஏரிகள், குளங்கள் மூலம், தடுப்பணைகள் மூலம் நீர் சேமிக்கப்படுகிறது. இதனால், விவசாயப் பெருமக்களுக்கு தேவையான நீர் கிடைக்கின்றது. குடிப்பதற்குத் தேவையான நீர் கிடைக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று சொன்னார்.