அடுத்த 2021 தேர்தல் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி சொன்ன அதிரடி பதில்!

2021ம் ஆண்டு தமிழகத்தில் நிச்சயம் அதிசயம் நிகழும் என்று ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை அழுத்திப் பேசி இருக்கிறார். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, நானே அந்த அதிசயம் என்று தெரிவித்து இருக்கிறார்.


ரஜினிகாந்த் மீண்டும் அதிசயம் பற்றி பேசியுள்ளாரே என்று தூத்துக்குடியில் முதல்வர் பழனிசாமியிடம் கேட்டபோது, ‘‘அவருக்கு எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என்று தெரியவில்லை. 2021-ஐ பொறுத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் மலரும் என்ற அதிசயத்தை அவர் சொல்லியிருப்பார் என்று நான் கருதுகிறேன். ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை, கட்சி தொடங்கிய பின்னர் கருத்துக்களை தெரிவிக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.  

அதேபோன்று, 2021-ல் முதல்வர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்தி தான் பிரசாரம் இருக்குமா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் பழனிசாமி, ‘‘இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை, அதற்குள் நீங்கள் கேட்கும் கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்தவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தினுடைய முதலமைச்சராக நிச்சயம் 2021-ல் வருவார்’’ என்று தெரிவித்து சமாளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘‘ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தது தான் விந்தையாக இருக்கிறது. அவர் உள்ளாட்சித் துறை மந்திரியாக இருந்தபொழுது மறைமுகத் தேர்தல் எதற்காக கொண்டு வரப்படுகிறது என்ற விளக்கத்தை சட்டமன்றத்திலே தெரிவித்திருக்கின்றார்.

அதை வேண்டுமானால் நான் படித்துக் காண்பிக்கின்றேன், நீங்கள் கேள்வி கேட்கின்றீர்கள், எனக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் 31.8.2006 அன்று மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு பதில், மறைமுகமாக தேர்ந்தெடுக்க சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தினார். 31.8.2006-ல் திரு.ஸ்டாலின் கூறுகையில், அசாம், குஜராத் என்று பல மாநிலங்களைப் பட்டியலிட்டு அங்கெல்லாம் மறைமுகத் தேர்தல் மூலம் தான் தலைவரை தேர்ந்தெடுக்கின்றார்கள் என்று கூறி தீர்மானத்தை நிறைவேற்றக் கோரினார்.

மேலும், ஸ்டாலின் 31.8.2006 அன்று தீர்மானத்தின் மீது பேசும்போது ‘மேயர் ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும், அதேபோல், மெஜாரிட்டியாக வரக்கூடிய உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சார்ந்தவர்களாகவும் வந்துவிடுகின்ற காரணத்தினால் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை அவையிலே வைத்து, மன்றக் கூட்டத்திலே வைத்து, அதை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலைக்கு அது தள்ளப்படுகிறது.

அதனால் மக்களுடைய பிரச்சினைகள் தேக்கம் அடையக்கூடிய நிலை இருக்கின்ற காரணம் ஒரு பக்கம், மேலும், உதாரணத்திற்கு விழுப்புரம், விருத்தாச்சலம் நகராட்சிகளில் 2001 தேர்தல் நடந்ததற்குப் பிறகு இதுவரையில் ஜூன் 2006 வரை அந்த இரண்டு நகராட்சிகளிலும் முறையாக கூட்டங்கள் நடைபெறவில்லை, முன் வைத்து நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களும் அங்கே முழுமையாக நிறைவேற்றப்பட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த நிலைகளையெல்லாம் கருத்திலே கொண்டு தான் இப்பொழுது இந்த முறையை நாங்கள் அமல்படுத்தியிருக்கின்றோம்’ என்று கூறி தீர்மானத்தை நிறைவேற்றித் தரக் கோரி இருந்தார். அவரே சொல்லிவிட்டார். அன்றையதினம் அவர் சொன்னால் சரி என்கிறார்கள், நாங்கள் அதை நடைமுறைப்படுத்தினால் தவறு என்கிறார்கள். இது அவையில் பதிந்துள்ளது. ஏற்கனவே 1996 வரையில் மறைமுகத் தேர்தல் தான் நடைபெற்றுள்ளது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலாகட்டும், மாவட்ட ஊராட்சிக்குரிய சேர்மன், பேரூராட்சி, நகர்மன்றத் தலைவர்கள், மாநகராட்சி மேயருக்குரிய தேர்தல்களாகட்டும், அனைத்துமே மறைமுக தேர்தல் மூலமே நடைபெற்றுள்ளது. 1996-ல்தான் திரு.கருணாநிதி அவர்கள் நேரடி தேர்தலை கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த அவர்களே மீண்டும் அதை மாற்றினார்கள். ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை மந்திரியாக இருந்தபொழுது மாற்றினார். இப்பொழுது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள். மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவர்களுக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் என்று கூறி ஸ்டாலினை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது குறித்து கேட்டபோது, ‘‘ஏற்கனவே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றபொழுது, பலர் அந்த நலத்திட்ட உதவிகளை பெறமுடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. பலர் ஏழைகளாக இருக்கின்றார்கள், தவறுதலாக சர்க்கரை வழங்கக்கூடிய குடும்ப அட்டையைப் பெற்றுவிட்டார்கள்.

சர்க்கரை வாங்கக்கூடிய குடும்ப அட்டையைப் பெற்றவர்கள், அரிசி வாங்கக்கூடிய குடும்ப அட்டைக்கு அவர்களை மாற்ற வேண்டுமென்று அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள், விருப்பப்பட்டவர்கள் சர்க்கரை வாங்கக்கூடிய குடும்ப அட்டையை, அரிசி வாங்கக்கூடிய குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.