உள்ளாட்சித் தேர்தல்..! பாஜக கூட்டணி..! தென்காசியில் எடப்பாடியார் வைத்த ட்விஸ்ட்!

உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்குப் பயந்துதான் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டங்களை உருவாக்கி, அவசரம் அவசரமாக விழா நடத்தி வருகிறார் என்று டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டி இருந்தார்.


தினகரனின் குற்றச்சாட்டுக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்தார். இன்று தென்காசி மாவட்ட தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ‘‘புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  

தென்காசி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காரணத்தால்தான் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இதனை காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்- முதல்வர் பழனிசாமி.

இதுதவிர, பா.ஜ.க. கூட்டணி குறித்தும் பேசினார். ‘‘பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி வைத்து 5 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் 6 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வாங்கிவிட்டோம்’’ என்று பெருமையாகத் தெரிவித்தார். அதேபோன்று, கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது’’ என்றும் தெரிவித்தார்.