மேட்டூர் அணையை முதல்வர் திறந்துட்டார் சரி, ஆனா தண்ணீர் டெல்டாவுக்குப் போகாதுன்னு சொல்றாங்களே?

85வது முறையாக மேட்டூர் அணை பாசனத்துக்காக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார்.


வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படும், 137 நாட்களுக்கு தண்ணீர் அனுப்பப்படும், இதனால் 16.05 லட்சம் ஹெக்டேர் ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்குப் பயன்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். 

ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை என்று டெல்டாவாசிகள் டென்ஷன் ஆகிறார்கள். கடந்த ஆண்டு இதேபோன்று ஆகஸ்ட், செப்டம்பரில் திறக்கப்பட்ட காவிரி நீர் எப்படி, சிந்தாமல் சிதறாமல் கடலுக்குப் போனதோ, அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது என்கிறார்கள்.

ஏனென்றால், நீர் வழித் தடங்கள் குறித்த விவசாயிகளின் கவனம் எல்லாம் பம்புசெட்டுக்களில் இருந்து நீரை வயல்களுக்கு கொண்டு செல்லும் குழாய் முறைகளிலேயே சுருங்கி விட்டன.. 

ஆறுகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால்கள் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால், டெல்டா பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களும் தூர்ந்து விட்டன. சரியாகச் சொன்னால் அதுபோன்ற நீர் வழித் தடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருமாறி விட்டன என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு விவசாயியும் போர் செட்டு வைத்துக்கொண்டு வயல்களுக்கு இடையே கூட நீர் போக்குவரத்துக்கு குழாய்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக வாய்க்கால் என்ற கருத்து நிலையே அவர்களிடம் இல்லாமல் போயிற்று.

தண்ணீருக்காக போராடும் விவசாய சங்க தலைவர்கள் அழிந்து போன நீர்வழித் தடங்களை புதுப்பிக்க என்ன செய்து இருக்கிறார்கள்? என்ன குரல் கொடுத்து இருக்கிறார்கள்? அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. அதற்காக குரலையும் உயர்த்தவில்லை. காரணம் தண்ணீர வரும் என்ற நமபிக்கை அவர்களிடம் இல்லை.

நூறு நாள் வேலை திட்டம் ஒரு ஏமாற்று வேலை. அரசாங்கம் கொடுக்கும் பணத்தை பங்குபோட்டுக் கொள்வதில் உள்ளூர் அரசியல்வாதிகளூக்கு மக்கள் துணைபோகிறார்கள். சொல்லப்போனால் மக்கள்தான் ஏமாற்றுகிறார்கள். நூறு நாள் வேலை என்றாலே வேலை எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பேரை மட்டும் கொடுத்து விட்டு வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். பணம் வீட்டுக்கு வந்து சேரும். இதுதான் மக்களின் மன நிலை.

இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் வாங்கும் பணத்திற்கு பத்தில் ஒரு பகுதி உழைப்பை மக்கள் போட்டு இருந்தால்கூட இன்றைக்கு உள்ளூர் நீர் தடங்களை மீட்டு எடுத்து இருக்கலாம். ஆனால், அப்படி யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அப்படியே தண்ணீர் கடலுக்குப் போகப் போகிறது.

வழக்கம்போல் வேடிக்கை பார்த்துவிட்டு, தண்ணீர் கொடு என்று கர்நாடகக்காரனைப் பார்த்து கதறப் போகிறோம். அம்புட்டுத்தான்.