விவசாயிகள் நிலங்களை கார்ப்பரேட் வசமாக்கும் விபரீத சட்டம்! கொந்தளிக்கும் காவிரி டெல்டா!

ஒப்பந்த அடிப்படையிலான விவசாயிகளுக்குப் பயன் தரும் வகையில் ஒரு சட்டத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இனி, ஒப்பந்த அடிப்படையில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பயன் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.


ஆனால், இதனால் விவசாயிகளுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து இருக்கிறார். 

ஒப்பந்த அடிப்படையில் விவசாய உற்பத்தி முறைக்கான ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு வேளாண் விளை பொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த சாகுபடி மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) சட்டம் 2019 என்ற இச்சட்டம், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க உதவி செய்யாது என்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

முதலமைச்சர் அவர்கள் இச்சட்டம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடும், தனது புளகாங்கிதத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைக்கவே உதவும். வேளாண் விளை பொருட்களுக்கான விலை தொடர்பான ஒப்பந்தத்தை அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட விவசாயிகளும், நிறுவனம் அல்லது வர்த்தகர்கள் ஏற்படுத்தி கொள்வார்கள் என்று சட்டம் குறிப்பிடுகிறது.

விவசாய உற்பத்திக்கான விலையை அரசு தீர்மானிப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இது வழிவகுக்கிறது. ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கிடைக்காத போது அதை பெற்றுத்தர அதிகாரிகள் தலையிடுவார்கள் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் விலை உயர்த்தி தீர்மானிக்க வேண்டுமென்ற சுவாமிநாதன் குழு பரிந்துரை இனி ஏட்டிலே மட்டும் இருக்கும். கம்பெனிகள் தங்களுக்கு லாபம் வரக்கூடிய வகையில் தான் விலையை தீர்மானிப்பார்களே தவிர விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க இந்த சட்டம் எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.

மாறாக, பெரும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்களின் நலன்களை பாதுகாக்கவே இச்சட்டம் பயன்படும். மேலும், குறைந்தபட்ச விலையை அரசு தீர்மானிப்பது, கொள்முதல் உத்தரவாதம், அரசு மானியம், விவசாய கடன் ஆகிய பொருப்புகளிலிருந்து அரசு முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்வது என்ற உள்நோக்கத்தோடு இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. கம்பெனிகள் தங்களுக்கு தேவையான வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய வற்புறுத்துவார்கள்.

இதனால் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கோ அல்லது மக்களுக்கு அத்தியாவசியமான உணவு தானிய உற்பத்தி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது உணவு தானியங்களுக்காக மற்ற மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையை உருவாக்கும். எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டு வேளாண் உற்பத்தியை பாதுகாக்க இச்சட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமென்று தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளிடம் கேட்டுட்டு சட்டம் போடுங்கப்பா...