இந்து கோயில்களுக்கு எடப்பாடி பழனிசாமி அள்ளிக்கொடுத்த அன்பு பரிசுகள், என்ன தெரியுமா?

தமிழ் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக்களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பது, அன்றாடப் பூஜைகள் தங்குதடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 20 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். 

மேலும், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம், அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், ஆற்காடுகுப்பம், அருள்மிகு சோளீஸ்வரர்சுவாமி திருக்கோயில் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடங்களையும் திறந்து வைத்தார்கள். 

மேலும், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம், அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயிலில் 2,464 சதுர அடி பரப்பளவில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான ஆற்காடுகுப்பம், அருள்மிகு சோளீஸ்வரசுவாமி திருக்கோயிலில் 2,110 சதுர அடி பரப்பளவில், 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் 2,016 சதுர அடி பரப்பளவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; என மொத்தம் 21 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபம் மற்றும் 3 அன்னதானக் கூடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள்.