காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்த துரைமுருகன்... டென்ஷனில் தேர்தல் குழு

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இன்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக அறிவாலயம் சென்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்குவதற்காக கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியை சிறப்பு தூதுவராக காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.


இதுகுறித்து ஆலோசிப்பதற்காக உம்மன்சாண்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டு ராவ், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வுடன் நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. அதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட செயல் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இன்று காலை 10 மணி அளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக உம்மன்சாண்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர். தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட குழுவினர் வந்திருந்தனர்.

இந்த பேச்சு வார்த்தையில் கடந்த தேர்தலில் 41 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது, அதேபோன்று இந்த தேர்தலிலும் 41 தொகுதிகள் வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப்பட்டதாம். அதைப் பார்த்த துரைமுருகன் அவருக்கே உரிய பாணியில் சிரித்தபடி, ‘கேட்கிறதுல என்ன தப்பு, நிறைய கேளுங்க’ என்று கமென்ட் அடித்தாராம். இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர்களை முகம் சிவக்க வைத்துள்ளது.

தி.மு.க. என்றாலே அப்படித்தானே... ஆனால், காலத்தின் கட்டாயமாக, பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக கூறியிருக்கிறது காங்கிரஸ் குழு.