ரூ.24 லட்சம் டுகாட்டி பைக்! அசுர வேகம்! சிவி சண்முகம் மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.


விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராகவும் அமைச்சராகவும் இருப்பவர் சிவி சண்முகம். மிக முக்கியமான சட்டம் மற்றும் நீதித்துறை இவர் கவனித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரிய  அமைச்சர்களில் சிவி சண்முகமும் ஒருவர். இவர் சென்னையில் தனது சகோதரர் ராதாகிருஷ்ணனுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

சிறு வயது முதலே சகோதரருடன் தான் சிவி சண்முகம் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார். ராதாகிருஷ்ணனின் மகன் அர்ஜுன். 20 வயதாகும் அர்ஜூன் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் கல்லூரி சென்று வர ஏராளமான கார்கள் உள்ளன. ஆனாலும் பைக் பிரியரான அர்ஜூன் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி பைக் வைத்துள்ளார்.

இந்த பைக்கில் தான் தினமும் அர்ஜூன் கல்லூரி சென்று திரும்பி வருகிறார். சம்பவத்தன்று பைக்கில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அர்ஜூனின் கால்களில் ஒன்றை அகற்ற நேரிட்டது.

ஆனாலும் கூட அர்ஜூனுக்கு நினைவு திரும்பவில்லை. இதனால் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அர்ஜூன் தனது அண்ணன் மகனாக இருந்தாலும் அவரை சிவி சண்முகம் தனது மகனாகவே கருதி வளர்த்து வந்துள்ளார். அவர் விபத்தில் சிக்கி காலை இழந்த வேதனையில் இருந்து சிவி சண்முகத்தால் மீள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட சோகம் காரணமாகவே சண்முகம் இன்றைய அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.