பெற்ற தந்தை தலையில் கல்லை போட்டு கொலை! தடுக்க வந்த தாய்க்கு கத்திகுத்து! எம்பிஏ பட்டதாரி வெறிச் செயல்!

எம்பிஏ பட்டதாரி ஒருவர் குடிபோதையில் பெற்ற தந்தையை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்தவர் வினோத். எம்பிஏ பட்டதாரியான இவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர், அதே பகுதியில் தள்ளுவண்டி கடையில் பிரியாணி விற்று வந்தனர். இந்நிலையில், வினோத் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதை யாரேனும் தட்டிக் கேட்டால் அவர்களிடம் பிரச்னை செய்வதும் வினோத்தின் வழக்கமாக இருந்துள்ளது.

இதன்படி, இன்று (மார்ச் 9) அதிகாலையில் போதை மயக்கத்தில் இருந்த வினோத், அண்டை வீட்டில் வசிக்கும் உறவினர்களுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை செல்வராஜ் இதனை தட்டிக் கேட்டுள்ளார். தந்தை என்றும் பாராமல் அவரிடமும் வினோத் காரசாரமாகப் பேசியுள்ளார். இதை, வினோத்தின் தாய் மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். 

இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற வினோத், தனது தந்தை செல்வராஜ் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். இதை தடுக்க வந்த தாய் மகாலட்சுமியை, கத்தியால் குத்தியுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் விரைந்து வந்த போலீசார், வினோத்தை கைது செய்தனர். படுகாயமடைந்த மகாலட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.