லாரியை நிறுத்திவிட்டு தூங்கிய டிரைவர்! 54 பேருடன் வந்து மோதிய டூரிஸ்ட் பஸ்! திடுக்கிட வைக்கும் சம்பவம்!

விழுப்புரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் பயணிகள் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புதுக்கோட்டை பகுதியில் இருந்து 54 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருக்கோவிலூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் சென்று கொண்டிருக்கையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதால் காயம் அடைந்த பயணிகளுக்கு முதலுதவி செய்யக்கூட இயலாத சூழல் நேர்ந்துள்ளது. இதற்கிடையே இந்த வழியாக சென்ற மற்றொரு பேருந்தில் காயமடைந்தவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தியதில், பேருந்து ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் பேருந்து தடுமாறி லாரியில் மோதியுள்ளது. மேலும், அனுமதி இல்லாமல் சரக்கு லாரி புறவழிச் சாலை அருகே நிறுத்தப்பட்டு ஓட்டுநர் தூங்கிக் கொண்டிருந்ததும் இந்த விபத்திற்கு காரணம்.

இந்த விபத்து நடந்த அடுத்த கணமே பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். லாரி ஓட்டுநரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.