"போட ஒரு பொண்ணு வேணும்" - ரெட்டை அர்த்த போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பு!

இரட்டை அர்த்த வசனங்களுடன் சென்னை முழுக்க ஒட்டப்பட்டுள்ள சினிமா விளம்பரம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


சிவகார்த்திக் இயக்கியுள்ள திரைப்படம் ‘கடல போட ஒரு பொண்ணு வேணும்’. இந்தப் படத்தில் பிரபல டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோவாக நடித்துள்ளார். மனீஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

காதலர் தினமான இன்று இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை முழுக்க போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் படத்தின் பாதி டைட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பெரிய கோடு அதன் பிறகு போட ஒரு பொண்ணு வேணும் என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் உள்ளன.

போட என்பது மிகவும் கொச்சையாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். அதாவது பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்க போட வேண்டும் என்று கொச்சையாக இளைஞர்கள், இளம் பெண்கள் பேசிக் கொள்வது வழக்கம்.

நானும் ரவுடி தான் எனும் படத்தில் கூட பார்த்திபனை பார்த்து நயன் தாரா உங்கள போடனும் சார் என்று பேசும் வசனம் பிரபலமானது. அந்த இரட்டை அர்த்தம் படத்திற்கு நல்ல விளம்பரத்தை கொடுத்தது. அந்த வகையில் போட வேண்டும் என்கிற வாசகத்தை வைத்து தனது படத்திற்கு விளம்பரம் தேட முடிவு செய்துள்ளார் இயக்குனர் சிவகார்த்திக்.

இதனால் சென்னை முழுவதும் போட ஒரு பொண்ணு வேணும் என்கிற வாசகத்துடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களை பார்த்து சென்னைவாசிகள் பலரும் முகம் சுழித்தபடி சென்றனர். அந்த விளம்பர பேனர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல் படத்துக்கான போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி இன்று  வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இதுபோன்ற  கெட்ட வார்த்தையோடு கூடிய விளம்பரத்தோடு வரும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டக்கூடாது என்றும் எதிர்ப்பு  எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட நடிகர் விஜய் சேதுபதி மறுத்துவிட்டார்.  விவகாரம் பெரிய பிரச்சனை ஆனதை தொடர்ந்து படக்குழு சார்பில் இயக்குனர் மன்னிப்பு கோரியுள்ளார்.