காய்களை மொத்தமா வாங்கி குவிக்காதீங்க.. கோயம்பேடு சந்தைக்கு லீவு இல்லையாம்.

தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய மொத்த விற்பனைக் காய்கனி அங்காடி வளாகமான கோயம்பேடு சந்தை நாளை வழக்கம்போல செயல்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, நேற்று வெளியான அறிவிப்பின்படி, வெள்ளி, சனி இரு நாள்களும் சந்தை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் முதலே தமிழ்நாட்டு அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி நடந்துவருகின்றன. இம்மாதம் 31ஆம் தேதிவரை மக்கள் கூடும் பொது இடங்கள் முதலில் மூடப்பட்டன.

மக்களின் நடமாட்டம் குறிப்பிட்ட நேரம் மட்டுப்படுத்தப்பட்டது. அதையடுத்து, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிந்தகையோடு 11ஆம் வகுப்பு மீதமுள்ள தேர்வுகளும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் இரத்துசெய்யப்பட்டது. இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரையில் ஊரடங்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது.

144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விதிவிலக்காக இன்றியமையாப் பொருள்கள் மற்றும் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. காய்கனிக் கடைகளுக்கு தடை இல்லாமல் இருந்ததால், மொத்த விற்பனையும் பாதிக்கப்படவில்லை.

காவல்துறையின் நெருக்கடிகளால் சிறுவணிகர்களும் கடைக்காரர்களும் இன்னலுக்கு ஆளாகினர். இதையொட்டி அங்காடியை இரு நாள்கள் மூடுவதாக கோயம்பேடு வணிகர் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.                                     

பல தரப்பு கோரிக்கைகளை அடுத்து சந்தையை வழக்கம்போல இயக்க வணிகர்கள் தீர்மானித்துள்ளனர். நாளை வழக்கம்போல கோயம்பேடு சந்தை செயல்படும் என அறிவித்துள்ளனர்.