ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வந்திருக்கேன்..! கடைக்குள் இளைஞர் அரங்கேற்றிய நூதன திருட்டு! வைரல் வீடியோ!

விருதுநகர் மாவட்டத்தில் நன்கொடை கேட்பது போல் வணிக வளாகங்களுக்கு வந்த அங்கிருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றவர் தேடப்பட்டு வருகிறார். பல இடங்களில் கைவரிசை காட்டிய அந்த நபர் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடிவருகின்றனர்.


அருப்புக்கோட்டை சத்திய மூர்த்தி பிரதான சந்தையில் உள்ள மின்சாதன விற்பனையகத்தில் சில தினங்களுக்கு முன்னர் வந்த நபர் காப்பகம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதற்கு நன்கொடை தேவை எனவும் கேட்டுள்ளார். பின்னர் அவர் மேசை மீது உள்ள செல்போனை நோட்டுப்புத்தகம் மூலம் மறைத்து எடுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் திருச்சுழி சாலையில் ஜியோ அலுவலகம் மற்றும் ஒரு கடையிலும் செல்போன் திருட்டு நடந்துள்ளது. திருட்டு சம்பவங்கள் குறித்து புகார்கள் ஏதும் பெறப்படாத நிலையில் காவல்துறையினர் அந்த மர்மநபரை தேடிவருகின்றனர்.

திருட்டு நடந்ததால் உடனடியாக போலீசுக்கு புகார் தர வேண்டும் எனக் கூறும் காவல்துறையினர் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கடைகள், அலுவலகங்களில் செல்போன்களை மேசை மீது வைத்துவிட்டு பணியை பார்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி பொருட்கள் வைத்துவிட்டு வேலை பார்க்கும் உரிமையாளர்கள் மிகவும் பிஸியாக இருப்பதை பார்த்து நோட்டமிடும் மர்மநபர்கள் பேச்சுக் கொடுத்தவாரே அந்த விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்கின்றனர்.