ஓட்டுக் கேட்க சேரிக்குள்ள வராத! பாமக வேட்பாளரை விரட்டியடித்த தலித் மக்கள்!

பெண்ணாடம் அருகே கடலூர் பாமக வேட்பாளரை ஆதிதிராவிடர் பகுதியில் ஓட்டு சேகரிக்க உள்ளே செல்ல பொது மக்கள் அனுமதிக்காததால் பரபரப்பு.


கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் சோழன் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களாக அப்பகுதிகளில் கடலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று இரவு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வேட்பாளர் கோவிந்தசாமி மற்றும் கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமு, புரட்சிமணி உட்பட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் ஓட்டு சேகரித்து வந்தனர்.

அப்போது பேரூராட்சிக்கு உட்பட்ட 8, 9 ஆகிய வார்டுகளுக்கு  செல்ல முயன்ற பொழுது திடீரென ஆதிதிராவிட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதிக்குள் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது எனவும் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் தொல் திருமாவளவன் சில கிராமங்களில் ஓட்டு சேகரிக்க சென்ற போது

அப்பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓட்டு சேகரிக்க விடாமல் தடுத்ததாக கூறி அவர்களை அங்கு தடுத்து காரணமாக தங்கள் பகுதிக்குள் உள்ளே வரக் கூடாது எனவும் ஜாதி மத வேறுபாடின்றி ஒரே சமமாக அனைவரும் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பெண்ணாடம் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அந்த வழியாக வந்த பாமக வேட்பாளர் கோவிந்தசாமி ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லாமல் அவசரம் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.