திசையன்விளையில் வீட்டு வேலைகளை சொன்னபடியே நன்றாகச் செய்யும் கருப்பன் என்கின்ற நாயை ஊர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கடைக்கு போவான்! ஜாமான் வாங்குவான்! நெல்லையை கலக்கும் கருப்பன்!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை அடுத்த அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவர் ஒரு மோட்டார் மெக்கானிக் ஆவார். இவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. இவர் சரியாக ஓராண்டுக்கு முன்பாக மெக்கானிக் வேலை பார்ப்பதற்காக உவரிக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார்.
வரும் வழியில் குட்டி நாய் ஒன்று பரிதாப நிலையில் கிடப்பதைக் கண்டு வீட்டிற்கு தூக்கி வந்து வளர்த்தார். அதற்கு கருப்பன் என்றும் பெயரிட்டார். குட்டியாக இருக்கும் போதே கருப்பனை கடைக்கு கூட்டி சென்று பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி அதனிடம் கொடுத்து இதை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூறுவார்.
அதுவும் பிஸ்கட் பாக்கெட்டை வாயில் கவ்வி கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்லும். நாளடைவில் தனசேகரன் மனைவி ஒரு சிறு துண்டு சீட்டில் மளிகை பொருட்கள் பட்டியலை எழுதி அதற்கான பணத்தையும் ஒரு சிறிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு கருப்பனின் வாயில் கவ்வ கொடுத்து அனுப்ப, அதுவும் பவ்யமாக கடைக்குச் சென்று தேவையான மளிகைப் பொருட்களை வீட்டிற்கு வாங்கி வரும்.
அதோடு மட்டுமல்லாமல் தனசேகரன் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது உடன் சென்று அங்கிருந்து தேங்காய் இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாக்குப்பையில் போட்டு தனசேகரன் கொடுக்க வீட்டில் கொண்டுவந்து ஒப்படைக்கும். இவ்வாறு வீட்டு வேலைகள் அனைத்தையும் கூறிய படி நன்றாக செய்யும் கருப்பனை அந்த ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கருப்பன் குறித்து தனசேகரன் கூறுகையில் தனக்கு சிந்துஜா என்ற மகளும் மதியழகன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களோடு சேர்த்து கருப்பனும் எனது மகன்தான் என்று அவர் கூறினார்.