நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக்! 4வது நாளாக போர்க்கோளம்! ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் அதற்கான காரணம் உண்மையில் அதிர வைப்பதாக உள்ளது.


கடந்த திங்களன்று இரவு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 75 வயதான முகமது ஷாகித் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக பல்வேறு அவதிகளை சந்தித்த அவர் அன்று இரவே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தான் நாடு முழுவதும் தற்போது மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதாவது முகமதுவை என்ஆர்எஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக கவனிக்கவில்லை அங்கிருந்த பயிற்சி மருத்துவர்களின் அலட்சியம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்ற உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பயிற்சி மருத்துவர்களான பரிபாஹா முகோபாத்யாய் மற்றும் ஒருவருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாகியுள்ளது. இதனால் அங்கிருந்த காவலர்கள் முகமதுவின் உறவினர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

ஆனால் சிறிது நேரத்தில் திரும்பி வந்த அவர்கள் தங்களுடன் ஏராளமானவர்களை அழைத்து வந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பயிற்சி மரத்துவர் முகோபாத்யாய் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல அவர் மீது செங்கல் வீசப்பட்டது. இந்த செங்கல் முகோபாத்யாய் மண்டையில் விழுந்து அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

உடனடியாக அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மண்டையில் விழுந்த செங்கல் காரணமாக தலைக்குள் மண்டை ஓட்டில்  வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முகோபாத்யாயாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்வைத்தே கடந்த செவ்வாயன்று கொல்கத்தா என்ஆர்எஸ் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் பரவத் தொடங்கியது. மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கை ஆனது. இது வரை மருத்துவர்கள் போராட்டம் மேற்குவங்கத்திற்குள் மட்டும் இருந்து. இந்த நிலையில் தான் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களை அழைத்து மம்தா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மம்தா மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் பயிற்சி மருத்துவர்கள் உடனடியாக கல்லூரிக்கு திரும்பவில்லை என்றால் ஹாஸ்டலை மூட வேண்டி வரும் என்றும் மம்தா எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தால் மேற்கு வங்கம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் மம்தாவிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். மேலும் மேற்கு வங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக டெல்லி, பீகார், மராட்டியம் ஏன் தமிழகம் வரை போராட்டம் நடைபெற்று வருகிறது.

காயம் அடைந்த பயிற்சி மருத்துவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமே அரசு மருத்துவமனைகளின் தரத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உண்மை இப்படி இருக்க ஒரே ஒரு மருத்துவர் காயம் அடைந்ததற்காக ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிலும் நோயாளிகள் அவதிப்பட வேண்டும் என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதே போல் மம்தாவிற்கு எதிராக மோடி அரசு மருத்துவர்களை கொம்பு சீவி விடுவதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ டாக்டர்கள் போராட்டம் அரசியல் ஆவதற்கு முன்னதாக முடிவிற்கு வர வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும்.