பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விபரீத பெண் டாக்டர்!

பெண் ஒருவரின் வயிற்றில் ஃபோர்செப்ஸ் எனப்படும் கத்தரிக்கோலை வைத்து டாக்டர் ஒருவர் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனிதா என்ற 45 வயது பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்தவர் பெண் டாக்டரான மங்களா ரவீந்திரன் ஆவார். இந்த டாக்டர் அவசர கதியில் அறுவை சிகிச்சை செய்தது மட்டுமின்றி, ஜெனிதாவின் வயிற்றுக்குள்ளேயே ஃபோர்செப்ஸ் எனும் கத்தரிக்கோலை வைத்து தையல் போட்டுவிட்டார்.

இதுதெரியாமல், வீடு திரும்பிய ஜெனிதாவுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது. மறுபடியும் அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அவர் உடல்நலத்துடன் உள்ளார்.

எனினும், இந்த விவகாரம் பற்றி மருத்துவ கவுன்சிலில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் விசாரணைக்குழு முன் ஆஜரான, மங்களா ரவீந்திரன், நிறைய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால், பதட்டம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும், மருத்துவ உபகரணங்களை கணக்கெடுக்கும் பணியை ஒரு செவிலியர் செய்வது வழக்கம். ஆனால், அந்த செவிலியர் கவனக்குறைவாக இருந்தால், இச்சம்பவங்கள் நடைபெற்றுவிடும், என்றும் மங்களா தெரிவித்துள்ளார். இதையடுத்து, குறிப்பிட்ட செவிலியருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.