படிக்காத மனிதர்கூட செய்யத் துணியாத ஒரு செயலை, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் அகில இந்தியத் தலைவரான மருத்துவர் சுப்பையா சண்முகம் செய்துள்ளார்.
செய்யக்கூடிய காரியமா இது..? ஏ.பி.வி.பி.யின் அகில இந்தியத் தலைவரான மருத்துவர் சுப்பையாவை கைது செய்ய வேண்டும்..!

இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சுப்பையா, அவரது வீட்டின் அருகில் வசித்துவரும் 62 வயது பெண்ணின் வீட்டு வாசலில், அவரது எதிரிலேயே சிறுநீர் கழித்துள்ளார். அவரது வாசலில் மாஸ்க் உள்ளிட்ட குப்பைகளை வீசியுள்ளார். பாலியல் ரீதியாக தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சந்திராவின் உறவினர் பாலாஜி விஜயராகவன் என்பவர் கடந்த ஜூலை 11 அன்று சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர், தனது புகாருக்கு ஆதாரமாக சிசிடிவி கேமரா பதிவுகளையும் அளித்துள்ளார். ஆனாலும், காவல்துறை சுப்பையா சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
குறிப்பிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. சுப்பையா சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. டிவிட்டர் மற்றும் ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறிய நிலையில், வேறு வழியின்றி ஜூலை 25 அன்று சுப்பையா சண்முகம் மீது ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனாலும், தமிழக காவல்துறை சுப்பையா சண்முகத்தை கைது செய்யவில்லை. இந்நிலையில், அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் மர்மமான முறையில் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறபோது அவர்கள் மீது தமிழக அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. “ஹைக்கோர்ட்டாவது மயிராவது” என்று பேசி, எச்.ராஜா உயர்நீதிமன்ற உத்தரவை மீறியபோதும், பெண் ஊடகவியலாளர்களை எஸ்.வி.சேகர் தரக்குறைவாக பேசியபோதும் தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அது போன்றுதான் டாக்டர் சுப்பையா சண்முகம் மீதான புகார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்தியது.
பெரும் நிர்பந்தத்திற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்தாலும் கைது செய்யமறுக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள், தமிழக காவல்துறை ஆர்எஸ்எஸ், பிஜேபி சங்பரிவார் அமைப்புகளின் கைப்பாவையாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இப்பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி குற்றவாளியான ஏபிவிபி அகில இந்தியத் தலைவர் சுப்பையா சண்முகத்தை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.