ஜாதித் திமிர் பிடித்து அலையும் பெண் டாக்டர்கள்! பாயல் மரணம் சொல்லும் திடுக் உண்மை!

இப்ப யாரு சார் ஜாதி பார்க்கிறாங்க என்று அசட்டையாக கடந்துசெல்லும் இளைய சமுதாயம் டாக்டர் பாயல் தற்கொலையை அறிந்துகொள்ள வேண்டும்.


சலீம் - அபேதா தத்வி தம்பதியரின் மகளான பாயல், பில் பழங்குடி இனத்திலிருந்து மருத்துவம் படிக்க வந்தவர். மும்பை நாயர் மெடிக்கல் காலேஜில் முதுநிலை மகப்பேறு மருத்துவம் பயின்று வந்திருக்கிறார். பாயலின் கணவர் சல்மானும் ஒரு மருத்துவர்தான். பாயல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே, அதே மருத்துவக் கல்லூரியின் சீனியர் மாணவிகளான ஹேமா, பக்திமெஹர், அங்கிதா எனு‌ம் மூவர் தொடர்ந்து சாதி ரீதியாக பாயலை ராகிங் செய்து வந்துள்ளனர்.

குறிப்பாக அந்த மருத்துவப் பெண்கள் தாங்கள் கழிப்பறை சென்றுவிட்டு வந்து, பாயலில் போர்வையில் காலை துடைத்திருக்கிறார்கள். அதோடு அதில் எச்சில் துப்பி வைப்பதும் தொடர்ந்து நடந்துள்ளது. எங்காவது வெளியே சென்று திரும்பினால் தகாத உறவுக்குப் போய் வருவதாகக் கூறி கேலி செய்துள்ளனர். ஆதிவாசி இனம் என்பதால் சீட் கிடைத்துவிட்டது, நீ எப்போதும் எங்களுக்கு சமம் இல்லை என்று விலக்கியே வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பாயலின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கிட்டத்தட்ட 1 ஆண்டு இப்படி நடந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இதனை சகிக்க முடியாமல் பாயல் கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்போது பாயலை சாதிரீதியாக ராகிங் செய்த ஹேமா, பக்திமெஹர், அங்கிதா ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். ஆரம்பித்தில் இதனை வெறுமனே ராகிங் பிரச்சனையாக மட்டுமே ஊடகங்கள் அணுகின நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாயலின் தாய் ஒரு புற்று நோயாளி. தனது சகோதரரின் உடல் குறைபாடு ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகவே பாயல் மருத்துவம் படிக்க வந்துள்ளார்.. தற்போது பாயல் சாவிற்கு காரணமானவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றும், அவர்களது மருத்துவப் பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பாயல் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்..

எவ்வளவு மெத்தப் படித்தாலும் சாதி ஆதிக்கச் சிந்தனை கொஞ்சம் கூட மாறாமல் வாழமுடியும் என்பதை அந்த பாயலை வன்கொடுமை செய்த பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள்.. பெரும் கனவுகளோடு உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் பாயலைப் போன்ற எண்ணற்றோர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி சுலபமாக வந்துவிடுவதாக சொல்லி அவர்களை சாதிய வன்கொடுமை /ராகிங் செய்யும் உளவியல் என்ன மாதிரியானது? போராட்டமே வாழ்வின் பிரதானமாகிப் போன பழங்குடி இனத்திலிருந்து வரும் பாயல்களை தம் உயிரையே போக்கிக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளுவது எது?

உண்மையில் பாயலை சாதிய வன்கொடுமை செய்து சாவிற்குள் தள்ளிய அந்த மூன்று பெண் மருத்துவர்களும் இச்சமூகத்தில் அதே சாதிய சிந்தனையோடு தங்கள் துறையில நிபுணர்களாக வலம் வரமுடியும் தானே? பெண்களும் ஆண்களைப் போன்று ஜாதிக் கொடூரர்களாக மாறுவது நியாயம்தானா..?