நோயாளியையும் இரட்டைக் குழந்தைகளையும் டோலியில் தூக்கிச்சென்ற மருத்துவர்! நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்!

பிரசவத்தின் போது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் உயிருக்குப் போராடிய பழங்குடிப் பெண்ணையும் அவரது இரட்டை குழந்தைகளையும் தூக்கிச் சென்று காப்பாற்றி இருக்கிறார் ஒரு தெலுங்கானா மருத்துவர்.


தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ரல்லா செலுகா கிராமத்தில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர்.அங்கு செல்ல சாலை வசதிகள் இல்லை.இந்த கிராமத்தைச் சேர்ந்த சுக்கி என்கிற 22 வயதுப் பெண்ணுக்கு சென்ற புதனன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.சிறிது நேரத்தில் இரத்தப்போக்கு அதிகமாகி சுக்கி மயக்கமடைந்தார்.

அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்கிறார்கள்.சாலை வசதி இல்லாததால் ரல்லா செலுகாவுக்கு வரமுடியாது என அவர்கள் மறுத்து விட்டனர்.இந்தத் தகவல் அருகிலுள்ள உளவனூர் கிராமத்தில் இருக்கும் ஆரம்பசுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ராம் பாபுக்குத் தெரியவந்தது.

ராம்பாபு உடனே செயல்பட்டு,  தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த கிராமத்துக்கு வந்தாத்.பாதிக்கப்பட்ட சுக்கியையும் அவரது இரட்டைக் குழந்தைகளையும் ஒரு கட்டிலில் படுக்க வைத்து அந்தக்கட்டிலை ஒரு மரத்தடியில் கயிறுகளால் பினைத்தார்.உறவினர்கள் உதவியுடன் டாக்டர் பாபுவே அந்த தற்காலிக டோலியைத் தூக்கிக் கொண்டு 5 கிலோமீட்டர் தூரம் நடந்து பிரதான சாலைக்கு சுக்கியையும் குழந்தைகளையும் கொண்டு வந்து சேர்த்தார்.

அங்கிருந்து அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதலுதவிகள் செய்து ,அரசு மருத்துவ மனையில் அனுமதித்தார்.டாக்ட்டர் ராம்பாபு நோயாளியை தோளில் சுமந்தபடி நடக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.அதே சமையம் ,தெலுங்கானாவில் போதுமான சாலைகள் இல்லாத அவலமும் வெளிப்பட்டு இருக்கிறது.